செப்டம்பர் 14 இல் பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீர் முகாம்
By DIN | Published On : 11th September 2019 06:53 AM | Last Updated : 11th September 2019 06:53 AM | அ+அ அ- |

திருப்பூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீர் முகாம் வரும் சனிக்கிழமை (செப்.14) நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக திருப்பூர் மாவட்ட நிர்வாகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் கீழ்க்கண்ட கிராமங்களில் வரும் சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையில் பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில், குடிமைப்பொருள் தனி வட்டாட்சியர்கள், வட்ட வழங்கல் அலுவலர்கள், தனி வருவாய் ஆய்வாளர்கள் கலந்து கொண்டு முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு தீர்வுகாண உள்ளனர்.
முகாம் நடைபெறும் இடங்கள்: அவிநாசி வட்டத்தில் வேட்டுபாளையத்தில் அ.குறும்பபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், திருப்பூர் வடக்கு வட்டத்தில், வேலம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், திருப்பூர் தெற்கு வட்டத்தில் அவினாசிபாளையம், வேலம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், ஊத்துக்குளி வட்டத்தில் ஊத்துக்குளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், பல்லடம் வட்டத்தில் சுக்கம்பாளையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இ-சேவை மையம் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.
அதேபோல உடுமலை வட்டத்தில் செல்லப்பம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், மடத்துக்குளம் வட்டத்தில் கொமரலிங்கம்தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், தாராபுரம் வட்டத்தில் சின்னியகவுண்டம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், காங்கயம் வட்டத்தில் கீரனூர் மரவபாளையம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஆகிய இடங்களில் முகாம்கள் நடைபெற உள்ளது.
இம்முகாமில், பொதுமக்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளுக்கான மனுக்களை வழங்கவும், மின்னணு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், பெயர் திருத்தம் போன்ற கோரிக்கைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.