அவிநாசி அருகே காட்டுவளவு கிராமத்தில் விவசாயி ஒருவரின் தோட்டத்தில் இலவச மின் இணைப்பில் மின் மீட்டர் பொருத்த வந்த மின்வாரிய அலுவலர்களை விவசாயிகள் விரட்டியடித்தனர்.
அவிநாசி ஒன்றியம், வடுகபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் 150-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் நிலக்கடலை, கரும்பு, மக்காச்சோளம், வாழை, பருத்தி உள்ளிட்டவை பயிரிடப்படுகின்றன. இப்பகுதி விவசாய நிலங்களுக்கு அரசு சார்பில் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் காட்டுவளவு கிராமத்தைச் சேர்ந்த சின்னசாமி என்பவருக்கு சொந்தமான கோயில் தோட்டத்தில் உள்ள இலவச மின் இணைப்பில் மின் மீட்டர் பொருத்துவதற்காக மின்வாரிய அலுவலர்கள் செவ்வாய்க்கிழமை வந்தனர். இதனை அறிந்த விவசாயி சின்னசாமி அருகில் உள்ள விவசாயிகளுக்கு தகவல் அளித்தார்.
இதையடுத்து அங்கு திரண்ட 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மின் மீட்டர் பொருத்த வந்த அலுவலர்களை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அலுவலர்கள் மின் மீட்டர் பொருத்தாமல் அங்கிருந்து சென்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய நிர்வாகி குமாரசாமி கூறியதாவது:
15 நாள்களுக்கு முன் போத்தம்பாளையத்தில் இலவச மின் இணைப்பில் மின் மீட்டர் பொருத்த அதிகாரிகள் வந்தனர். அப்போதே தடுத்து நிறுத்தி அவிநாசி மின்வாரிய அலுவலர்களிடம் இலவச மின் இணைப்பில் மின் மீட்டர் பொருத்தக் கூடாது என கோரிக்கை மனு அளித்தோம். அவர்களும் இனி மின் மீட்டர் பொருத்தமாட்டோம் என உறுதியளித்தனர்.
ஆனால் தற்போது வடுகபாளையம் ஊராட்சியில் மின் மீட்டர் பொருத்த முயன்றுள்ளனர். மீண்டும் மின் மீட்டர் பொருத்த முற்பட்டால் ஒட்டுமொத்த விவசாய சங்கங்கள் கூட்டமைப்பினரும் இணைந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.