வேலையில்லாத சிறுபான்மையினர் இலவச திறன் வளர்ப்பு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 11th September 2019 06:56 AM | Last Updated : 11th September 2019 06:56 AM | அ+அ அ- |

திருப்பூர் மாவட்டத்தில் வேலையில்லாத சிறுபான்மையினர் இலவச திறன் வளர்ப்பு பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்.
இதுதொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி மற்றும் நிதிக் கழகத்தின் நிதி உதவியுடன் (Kaushal Se Kushalata Scheme) திட்டத்தின் கீழ் டாம்கோ மூலம் படித்து வேலையில்லாத சிறுபான்மையின வகுப்பைச் சேர்ந்த இளைஞர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத்தில் செயல்படும் மத்திய காலணி பயிற்சி நிலையத்தில் இலவச பயிற்சியும், அதன் பிறகு வேலைவாய்ப்பு ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் "ஸ்டிச்சர் கூட்ஸ்' மற்றும் "கார்மெண்ட்ஸ்', "பிரி அசெம்பிளி ஆபரேட்டர்' ஆகிய பயிற்சிகள் 46 நாள்களுக்கு அளிக்கப்பட உள்ளது. இதில் ஒவ்வொரு பயிற்சிக்கும் தலா 20 நபர்கள் வீதம் மொத்தம் 40 நபர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இத்திட்டத்தின் கீழ் மதவழி சிறுபான்மையினர் வகுப்பைச் சேர்ந்த இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர், சீக்கியர்கள், பார்சியர்கள் மற்றும் ஜெயின் பிரிவைச் சார்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சியாளரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு மிகாமலும், 18 முதல் 55 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். இப்பயிற்சியின் போது ஒரு பயனாளிக்கு ரூ.1,534 பயிற்சி உதவித்தொகையாக அளிக்கப்படும். உண்டு உறைவிடக் கட்டணம் ஏதும் வழங்கப்படாது.
இதற்கான நேர்காணல், காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத்தில் உள்ள மத்திய காலணி பயிற்சி நிலையத்தில் செப்டம்பர் 20 ஆம் தேதி நடைபெறுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்புவோர் அசல் சாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, கல்விச் சான்றிதழ் ஆகிய சான்றிதழ்களுடன் நேர்காணலில் கலந்துக் கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலும், மத்திய காலணி பயிற்சி நிலையத்தில் மனோகரனை 8939813412 என்ற செல்லிடப்பேசி எண்ணிலும், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தை 044-28514846 என்ற எண்ணிலும் தொடர்புகொள்ளலாம்.
எனவே, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையினர் இத்திட்டத்தினைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.