போலி ரூபாய் நோட்டுகளை மாற்ற முயன்ற இளைஞர் கைது
By DIN | Published On : 29th September 2019 12:19 AM | Last Updated : 29th September 2019 12:19 AM | அ+அ அ- |

திருப்பூரில் ரூ. 2 ஆயிரம் நோட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து மாற்ற முன்ற இளைஞரை காவல் துறையினர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
திருப்பூர்,தென்னம்பாளையம், பூம்புகார் நகரைச் சேர்ந்தவர் எம்.மனோஜ் (29). இவர் வீரபாண்டி சாலையில் பணப் பரிவர்த்தனை மையம் (மணி டிரான்ஸ்பர்) நடத்தி வருகிறார். இவரது கடைக்கு வெள்ளிக்கிழமை பிற்பகல் இளைஞர் ஒருவர் வந்தார். அவர் ரூ.2 ஆயிரம் நோட்டுகள் 5-ஐ கொடுத்து உறவினர்களுக்கு அனுப்பச் சொல்லியுள்ளார். ஆனால் இந்த நோட்டுகளின் மீது மனோஜுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதுகுறித்து மனோஜ், வீரபாண்டி காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் அந்த இளைஞரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் அருணாசலபிரதேசத்தைச் சேர்ந்த சமீர்காந்தி ஷர்மா (28) என்பதும் திருப்பூரில் தங்கி பின்னலாடை நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.
மேலும் ரூ. 2 ஆயிரம் நோட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து உறவினர்களுக்கு அனுப்ப முயன்றதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சமீர்காந்தி ஷர்மாவை காவல் துறையினர் கைது செய்து, அவரிடமிருந்த 7 கலர் ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.