வாக்காளர் பட்டியலில் பெயர்களை சரிபார்க்கும் சிறப்பு முகாம்
By DIN | Published On : 29th September 2019 12:20 AM | Last Updated : 29th September 2019 12:20 AM | அ+அ அ- |

திருப்பூர் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சரிபார்த்துக் கொள்ள மாநகராட்சி அலுவலகத்தில் சிறப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக திருப்பூர் மாநகராட்சி ஆணையர் க.சிவகுமார் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் பதிவினை வாக்காளர்களே இணையதளம், செல்லிடப்பேசி செயலி மூலம் சரிபார்த்துக் கொள்ளும் வசதியை வழங்கியுள்ளது. திருப்பூர் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி வாக்காளர்கள் தங்கள் பெயரை சரிபார்த்துக்கொள்ள வசதியாக திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலகத்தில் சிறப்பு முகாம் எற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம், அரசுப் பணியாளர் அட்டை அல்லது அரசு வழங்கியுள்ள ஏதேனும் ஒரு அடையாள அட்டை ஆகியவற்றைக் கொண்டு வாக்காளர் பட்டியலில் உள்ள தங்களது பெயர் பதிவினை சரிபார்த்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளக்கோவிலில்: வெள்ளக்கோவில் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளுக்கும் நகராட்சி அலுவலர்கள், வருவாய்த் துறை அலுவலர்கள் அடங்கிய தனித் தனி குழுக்கள் அமைக்கப்பட்டு, வாக்காளர் பட்டியல் பெயர் சரிபார்ப்பு பணி நடைபெற்று வருகிறது. நகராட்சி 16ஆவது வார்டைச் சேர்ந்த நத்தமேடு, செம்மாண்டம்பாளையம் சாலை, செம்மாண்டம்பாளையம் ஊர் குடியிருப்புப் பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில் புதிய வாக்காளர்களை சேர்த்தல், பெயர் நீக்கம், பிழைகள் திருத்தம், விவரங்களை சரிபார்க்கும் பணி
நடைபெற்றது.