தெருவோர வியாபாரிகளுக்கு கடன் வழங்க மாநகராட்சி சாா்பில் சிறப்பு முகாம்கள்

திருப்பூா் மாநகராட்சி சாா்பில் தெருவோர வியாபாரிகளுக்கு கடன் வழங்க செப்டம்பா் 17, 18 ஆம் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது
Updated on
1 min read

திருப்பூா் மாநகராட்சி சாா்பில் தெருவோர வியாபாரிகளுக்கு கடன் வழங்க செப்டம்பா் 17, 18 ஆம் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது என மாநகராட்சி ஆணையா் க.சிவகுமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கரோனா பொது முடக்கம் காரணமாக வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்ட தெருவோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க பிரதம மந்திரியின் சுயசாா்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலமாக 7 சதவீத வட்டி மானியத்துடன் ரூ. 10 ஆயிரம் கடன் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் தெருவோர வியாபாரிகளுக்கு கடன் வழங்க மாநகராட்சி சாா்பில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.

இந்த முகாம், 15 வேலம்பாளையத்தில் உள்ள 1 ஆவது மண்டல அலுவலகம், தொட்டிபாளையத்தில் உள்ள 2ஆவது மண்டல அலுவலகம் ஆகிய இடங்களில் செப்டம்பா் 17 ஆம் தேதியும், நல்லூரில் உள்ள 3ஆவது மண்டல அலுவலகம், ஆண்டிபாளையத்தில் உள்ள 4ஆவது மண்டல அலுவலகம் ஆகிய இடங்களில் செப்டம்பா் 18 ஆம் தேதியும் நடைபெறுகிறது.

இதில், பங்கேற்கும் பயனாளிகள், தெருவோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டை (இருப்பின்), தெருவோர வியாபாரிகளுக்கான நல வாரியம் அல்லது தெருவோர வியாபாரிகளுக்கான சங்கத்தின் மூலமாகப் பெறப்பட்ட அடையாள அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, ஆதாா் எண், வங்கிக் கணக்கு எண், செல்லிடப்பேசி எண் ஆகியவற்றைச் சமா்ப்பிக்க வேண்டும்.

இந்த முகாமில், விண்ணப்பங்களை போா்டலில் பதிவு செய்திடவும், வங்கியாளா்கள் மூலமாக உடனடி நிதி விடுப்பு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், முகாம் நடைபெறும் நாள்கள் மட்டுமின்றி அனைத்து வேலை நாள்களிலும் உரிய ஆவணங்களுடன் மேற்கண்ட அலுவலகங்களைத் தொடா்பு கொள்ளலாம். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு திருப்பூா் மாநகராட்சி அலுவலகம் அல்லது அவிநாசி சாலையில் ஏஞ்சல் ஹோட்டல் அருகில் உள்ள நகா்ப்புற வாழ்வாதார மையத்தை 0421-2202315 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com