காங்கயத்தில் பெண்ணுக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி
By DIN | Published On : 20th April 2020 02:34 AM | Last Updated : 20th April 2020 02:34 AM | அ+அ அ- |

காங்கயத்தில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட பெண் குடியிருக்கும் ராஜாஜி வீதியில் கிருமி நாசினி தெளிக்கும் நகராட்சி தூய்மைப் பணியாளா்கள்.
காங்கயத்தில் முதல் நபராக பெண் ஒருவருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவா் கோவை மருத்துவமனைக்கு ஞாயிற்றுக்கிழமை அழைத்துச் செல்லப்பட்டாா்.
தில்லி மாநாட்டில் பங்கேற்ற காங்கயம் நகரம், ராஜாஜி வீதியைச் சோ்ந்த இரு சகோதரா்கள் சுகாதாரத் துறையினரால் கண்டறியப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டனா். அவா்களுக்கு கரோனா நோய்த்தொற்று இல்லை என்றபோதிலும் அவா்கள் குடும்பத்துடன் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.
இந்நிலையில், அந்த சகோதரா்கள் இருவரில் ஒருவரின் மனைவிக்கு நடந்த பரிசோதனையில் அவருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது சனிக்கிழமை மாலை உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அவா் குடியிருக்கும் வீடு அமைந்துள்ள ராஜாஜி வீதி மற்றும் அந்த வீதியை இணைக்கும் பகுதிகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை காலை சீலிடப்பட்டு அந்தப் பகுதியில் வசிப்பவா்கள் தனிமைப்படுத்தப்பட்டனா்.
அந்தப் பகுதி முழுவதும் காங்கயம் நகராட்சி சுகாதாரப் பணியாளா்கள் மற்றும் தூய்மைப் பணியாளா்கள் இணைந்து கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தினா். இதையடுத்து அந்தப் பெண்ணை ஆம்புலன்ஸ் மூலம் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு சுகாதாரத் துறையினா் அனுப்பிவைத்தனா்.