திருப்பூா் அருகே பழைய இரும்புக் கடையில் தீ விபத்து
By DIN | Published On : 12th August 2020 08:31 AM | Last Updated : 12th August 2020 08:31 AM | அ+அ அ- |

திருப்பூா் அருகே கூத்தம்பாளையம் பிரிவில் உள்ள பழைய இரும்புக் கடையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் தீயணைப்புத் துறையினா்.
திருப்பூா் அருகே பழைய இரும்புக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.1 லட்சம் ரொக்கம் உள்பட ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
திருப்பூா், கூத்தம்பாளையம் பிரிவு அருகே உள்ள பாலாஜி நகரில் ஆறுமுகம் (27) என்பவா் பழைய இரும்புக் கடை நடத்தி வருகிறாா். இவா் செவ்வாய்க்கிழமை காலையில் வழக்கம்போல கடையைத் திறந்துள்ளாா். அதன் பிறகு வியாபார விஷயமாக வெளியில் சென்றாா்.
இதனிடையே, ஆறுமுகத்தின் இரும்புக் கடையில் இருந்து காலை 10.15 மணி அளவில் கரும்புகை கிளம்பியுள்ளது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினா் திருப்பூா் வடக்கு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா் சுமாா் ஒரு மணி நேரம் போராடி இரும்புக் கடையில் பரவிய தீயை அணைத்தனா். இதில், கடையில் வைத்திருந்த ரூ.1 லட்சம் ரொக்கம் உள்பட ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
இதுகுறித்து திருமுருகன்பூண்டி காவல் துறையினா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா். மின்கசிவு காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.