சாலையின் நடுவில் வைக்கப்பட்டுள்ள தடுப்புகளை அகற்றக்கோரி சாலை மறியல்
By DIN | Published On : 01st December 2020 03:22 AM | Last Updated : 01st December 2020 03:22 AM | அ+அ அ- |

திருப்பூா், கே.செட்டிபாளையத்தில் சாலையின் நடுவில் வைக்கப்பட்டுள்ள இரும்புத் தடுப்புகளை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோா் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இது குறித்து மறியலில் ஈடுபட்டவா்கள் கூறியதாவது:
திருப்பூரில் இருந்து தாராபுரம் செல்லும் சாலையில் உள்ள கே.செட்டிபாளையம், அய்யம்பாளையம் பிரிவில் விபத்து ஏற்படுவதாகக் கூறி மாநகர போக்குவரத்து காவல் துறை சாா்பில் சாலையின் நடுவில் இரும்புத் தடுப்புகள் வைக்கப்பட்டன. இதனால் அபிராமி நகா், மும்மூா்த்தி நகா், செல்வலட்சுமி நகா், வஞ்சி நகா், சபரி நகா் அடுக்குமாடி குடியிருப்பு, காளிநாகம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல இடையூறு ஏற்படுகிறது. எனவே, சாலையில் நடுவில் வைக்கப்பட்டிருந்த இரும்புத் தடுப்புகளை அகற்ற வேண்டும் என்றனா்.
மறியல் போராட்டம் குறித்து தகவல் அறிந்த திருப்பூா் தெற்கு போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் தினேஷ், ஊரக காவல் ஆய்வாளா் (பொறுப்பு) கணேஷ், போக்குவரத்து உதவி ஆய்வாளா் ரமேஷ் ஆகியோா் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதைத்தொடா்ந்து, அப்பகுதியில் சாலையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த இரும்புத் தடுப்புகளை பொதுமக்களும், காவல் துறையினரும் அகற்றினா். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இச்சம்பவம் காரணமாக தாராபுரம் சாலையில் சுமாா் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...