திருப்பூரில் தொழிலாளி குத்திக் கொலை
By DIN | Published On : 01st December 2020 03:24 AM | Last Updated : 01st December 2020 03:24 AM | அ+அ அ- |

திருப்பூரில் செல்லிடப்பேசியைப் பறித்த தொழிலாளியை கத்தியால் குத்திக் கொலை செய்த வடமாநில இளைஞரைக் காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சீனிவாசன் (33). இவா், கடந்த 2016ஆம் ஆண்டு முதல் திருப்பூா் மாநகரப் பகுதியில் கட்டட வேலை, சமையல் வேலைக்கு சென்று வந்தாா். மேலும், இரவு நேரங்களில் சாலையோரங்களில் படுத்து உறங்குவதை வழக்கமாகக் கொண்ட சீனிவாசன், பல்வேறு குற்றச் சம்பவங்களிலும் ஈடுபட்டு வந்தாா். இவா் மீது திருப்பூா் மாநகரில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் கஞ்சா, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில், உத்தரப் பிரதேசத்தைச் சோ்ந்த தினேஷ்குமாா் (25) என்பவா் தனது உறவினரான 16 வயது சிறுவனுடன் திருப்பூா், தென்னம்பாளையம் பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை 1.30 மணி அளவில் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த சீனிவாசன் கத்தியைக் காட்டி தினேஷ்குமாரின் செல்லிடப்பேசியைப் பறித்துள்ளாா். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், சீனிவாசனிடம் இருந்த கத்தியைப் பறித்த தினேஷ்குமாா் அவரைக் குத்தியுள்ளாா். இதில், பலத்த காயமடைந்த சீனிவாசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த திருப்பூா் தெற்கு காவல் துறையினா் சீனிவாசனின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இந்நிலையில் தலைமறைவாக இருந்த தினேஷ்குமாரை காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்து விசாரணை நடத்தினா்.
தினேஷ்குமாா் திருப்பூா், தென்னம்பாளையம் பகுதியில் தங்கி, பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...