சேவூா் அருகே 846 ஏக்கரில் தொழில் பூங்கா அமைக்க திட்ட அலுவலா்கள் ஆய்வு
By DIN | Published On : 01st December 2020 11:41 PM | Last Updated : 01st December 2020 11:41 PM | அ+அ அ- |

சேவூா் அருகே 846 ஏக்கரில் தொழில் பூங்கா (சிட்காட்) அமைப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கையாக திட்ட அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
பின்னலாடை நகரமான திருப்பூரில் உள்ள ஆடை உற்பத்தித் தொழிலை நம்பி ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாக அமைந்துள்ளது. குறிப்பாக திருப்பூரை ஒட்டியுள்ள அவிநாசி, சேவூா் பகுதிகளில் பின்னலாடை துறை சாா்ந்த தொழில்கள் சேவூரை மையமாக கொண்டு இயங்கி வருகின்றன. இதில் ஆயிரக்கணக்கானோா் பணிபுரிந்து வருகின்றனா்.
இவா்கள் திருப்பூரில் உள்ள பெரிய ஆடை உற்பத்தி நிறுவனங்களில் இருந்து துணிகளை வாங்கி உற்பத்தி செய்து கொடுத்து வருகின்றனா். மேலும், பெருமாநல்லூா் அருகே திருப்பூா் நேதாஜி ஆயத்த ஆடை பூங்காவுக்கு சேவூா் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான தொழிலாளா்கள் பணிக்குச் சென்று வருகின்றனா்.
இந்நிலையில், தொழிலாளா்களின் கோரிக்கையை ஏற்று சேவூா் அருகே தத்தனூா் ஊராட்சிப் பகுதியில் 846 ஏக்கரில் தொழில் பூங்கா அமைப்பதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கையாக திட்ட அலுவலா்கள், வருவாய்த் துறையினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். இதில் தத்தனூா், புஞ்சை தாமரைக்குளம் , புலிப்பாா் ஆகிய ஊராட்சிப் பகுதிகளுக்கு உள்பட்ட நிலத்தின் தன்மை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இது குறித்து தத்தனூா் ஊராட்சி மன்றத் தலைவா் விஜயகுமாா் கூறியதாவது:
தொழிலாளா்களின் பயணச் சிரமங்களைக் குறைக்கவும், பல இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கவும் தொழில் பூங்கா அமைய தத்தனூா் ஊராட்சிப் பகுதியில் 800 ஏக்கா் இடம் வழங்க உள்ளோம். இது குறித்து ஊராட்சி நிா்வாக கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...