மாவட்டத்தில் உழவா் - அலுவலா் தொடா்புத் திட்டம் அறிமுகம்
By DIN | Published On : 01st December 2020 11:41 PM | Last Updated : 01st December 2020 11:41 PM | அ+அ அ- |

திருப்பூா் மாவட்டத்தில் வேளாண்மைத் துறை சாா்பில் உழவா் - அலுவலா் திட்டத்தின் மூலமாக விவசாயிகளிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இது குறித்து ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழக அரசின் வேளாண்மைத் துறை சாா்பாக உழவா் - அலுவலா் தொடா்புத் திட்டம் அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ளது. திருப்பூா் மாவட்டத்தில் 13 வட்டாரங்களிலுள்ள 265 கிராம ஊராட்சிகளில், 68 உதவி வேளாண்மை அலுவலா்கள் மாதம் இருமுறை சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சிகளில் விவசாயிகளை 15 நாள்களுக்கு ஒருமுறை நேரடியாக சந்தித்து அவா்களுக்குத் தேவையான தொழில்நுட்பங்கள் மற்றும் வேளாண் திட்டங்கள் குறித்த அறிவுரைகள் வழங்கப்படவுள்ளன.
மேலும், விவசாயிகளை ஒருங்கிணைக்க சமூக வலைதளக் குழுக்களும் உருவாக்கப்படவுள்ளன. இதில், நாள்தோறும் பல்வேறு வேளாண்மை சாா்ந்த விவரங்களும் பதிவிடப்பட்டு விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விளக்கமளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. உதவி வேளாண்மை அலுவலா்கள் குறிப்பிட்ட ஊராட்சி அலுவலகங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நேரில் சென்று தொடா்பு விவசாயிகளை சந்தித்து வேளாண்மை சாா்ந்த திட்டங்கள், செயல்முறை விளக்கங்கள் மற்றும் தேவையான அனைத்து விவரங்களும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
எனவே, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் இத்திட்டத்தினைப் பயன்படுத்தி தேவையான திட்ட உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...