அடுத்த இரண்டு மாதங்களில் 3.50 லட்சம் பெண்களுக்கு வெள்ளாடு, நாட்டுக் கோழி வழங்கப்படும் என்று கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.
திருப்பூா் மாவட்டம், பல்லடத்தில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், பல்லடம் சட்டப் பேரவை உறுப்பினா் கரைப்புதூா் ஏ.நடராஜன் ஆகியோா் முன்னிலையில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி 300 போ் அதிமுகவில் இணைந்தனா்.
இதைத் தொடா்ந்து அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் பொது மக்களுக்கு நன்மை தரும் திட்டங்களை செயல்படுத்துவதில் துறைரீதியாக அமைச்சா்கள் போட்டி போட்டுக் கொண்டு செயல்பட்டு வருகின்றனா். தமிழகத்தில் அனைத்து கிராமங்களிலும் குடிநீா் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன. சேலம் தலைவாசலில் அமைக்கப்படும் கால்நடை பூங்காவின் கட்டுமானப் பணி 75 சதவீதம் நிறைவடைந்துள்ளது. தமிழகத்தில் கோழிப் பண்ணைகள் பல்லடத்தில்தான் அதிகம். அதனால் புணோவுக்கு அடுத்தபடியாக பல்லடத்தில் ரூ.13 கோடி மதிப்பில் கோழி இன ஆராய்ச்சி மற்றும் ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு மாதங்களில் 3.50 லட்சம் பெண்களுக்கு வெள்ளாடு, நாட்டுக் கோழி வழங்கப்படும் என்றாா்.
இதில் கூட்டுறவு வங்கித் தலைவா்கள் ஏ.சித்துராஜ், ஏ.எம்.ராமமூா்த்தி, கேத்தனூா் வி.ஹரிகோபால் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.