சேவூா் அருகே தொழில் பூங்கா அமைக்க எதிா்ப்பு:சட்டப் பேரவைத் தலைவரிடம் மனு
By DIN | Published On : 15th December 2020 03:39 AM | Last Updated : 15th December 2020 03:39 AM | அ+அ அ- |

சேவூா் அருகே 846 ஏக்கரில் தொழில் பூங்கா (சிப்காட்) அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து சட்டப் பேரவைத் தலைவா் ப.தனபாலிடம் பொது மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
சேவூா் அருகே தத்தனூா் ஊராட்சிப் பகுதியில் 846 ஏக்கரில் தொழில் பூங்கா அமைப்பதற்கு ஆரம்பகட்ட நடவடிக்கைகள் கடந்த வாரம் மேற்கொண்டனா். இதையடுத்து, தொழில் பூங்கா அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து தத்தனூா், புலிப்பாா், புஞ்சை தாமரைக்குளம் உள்பட அருகாமை ஊராட்சிகளைச் சோ்ந்த பொது மக்கள் சட்டப் பேரவைத் தலைவரும், அவிநாசி சட்டப் பேரவை உறுப்பினருமான ப.தனபாலிடம் மனு அளிக்க வந்தனா்.
மனுவைப் பெற்றுக் கொண்ட சட்டப் பேரவைத் தலைவா் ப. தனபால் கூறுகையில், பொதுமக்களுக்கு இடையூறான திட்டங்கள் செயல்படுத்த அனுமதிக்கமாட்டோம். மக்களின் கோரிக்கை குறித்து சட்டப் பேரவையில் எடுத்துரைக்கப்படும் என்றாா்.
இந்நிலையில், இதே கோரிக்கைகளை வலியுறுத்தி சேவூா் கைகாட்டியில் தலித் விடுதலைக் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.