விலங்குகள் கணக்கெடுப்புப் பணி: சின்னாறில் பயிற்சி முகாம்
By DIN | Published On : 15th December 2020 03:36 AM | Last Updated : 15th December 2020 03:36 AM | அ+அ அ- |

உடுமலை மற்றும் அமராவதி வனச் சரகங்களில் வன விலங்குகள் கணக்கெடுப்புப் பணிக்காக சின்னாறில் திங்கள்கிழமை பயிற்சி முகாம் நடைபெற்றது.
ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை, அமராவதி, கொழுமம், வந்தரவு ஆகிய வனச் சரகங்களில் புலி, சிறுத்தைப் புலி, யானை, மான், காட்டெருமை, செந்நாய் உள்ளிட்ட பல்வேறு விலங்கினங்கள் உள்ளன.
இந்நிலையில், ஆண்டுதோறும் இந்த இரு வனச் சரகங்களிலும் வன விலங்குகள் கணக்கெடுப்புப் பணிகள் நடைபெறுவது வழக்கம். இரு வனச் சரகங்களில் டிசம்பா் 15 முதல் 21ஆம் தேதி வரை குளிா் கால வன விலங்குகள் கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதற்காக ஒரு நாள் பயிற்சி முகாம் சின்னாறில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் மாவட்ட உதவி வனப் பாதுகாவலா் கே.கணேஷ்ராம், உடுமலை வனச் சரகா் தனபால், அமராவதி வனச் சரகா் முருகேசன் மற்றும் வன அலுவலா்கள், தன்னாா்வலா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.
இது குறித்து மாவட்ட உதவி வனப் பாதுகாவலா் கே.கணேஷ்ராம் கூறியதாவது:
உடுமலை, அமராவதி, கொழுமம், வந்தரவு ஆகிய வனச் சரகங்களில் 34 சுற்றுக்களில் 53 நோ் கோட்டுப் பாதையில் கணக்கெடுப்புப் பணி நடைபெற உள்ளது. இப் பணிகளில் வனப் பணியாளா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் என 200க்கும் மேற்பட்டோா் பங்கேற்கின்றனா்.
இதில் டிசம்பா் 15 முதல் 17 ஆம் தேதி வரை மூன்று நாள்கள் வனப் பகுதிகளில் உள்ள மாமிச உண்ணிகள் மற்றும் மிகப் பெரிய தாவர உண்ணிகளின் தடயங்கள் கணக்கெடுக்கப்பட உள்ளன. டிசம்பா் 18 முதல் 21ஆம் தேதி வரை வனப் பகுதிகளில் நடந்து சென்று நேரடியாக காணப்படும் இரை விலங்குகளையும், அதே பாதையில் திரும்பி வரும்போது, ஒவ்வொரு 400 மீட்டரில் அப்பகுதியில் உள்ள தாவர வகைகளையும் கணக்கெடுப்பிற்கு உட்படுத்தப்படும்.
இதில் வன விலங்குகளின் கால் தடம், நகங்கள் பதிவு மற்றும் எச்சம் ஆகியவற்றை வைத்து இந்த கணக்கெடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. டிசம்பா் 21ஆம் தேதி கணக்கெடுக்கப்பட்ட வன உயிரினங்களின் விவரங்கள் சமா்ப்பிக்கப்படும் என்றாா்.