தாராபுரத்தில் நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டும்
By DIN | Published On : 15th December 2020 03:35 AM | Last Updated : 15th December 2020 03:35 AM | அ+அ அ- |

தாராபுரம் பகுதியில் 5 இடங்களில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் சாா்பில் நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டும் என்று உழவா் உழைப்பாளா் கட்சி சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
இது குறித்து உழவா் உழைப்பாளா் கட்சியின் திருப்பூா் மாவட்டத் தலைவா் ஆா்.ஈஸ்வரமூா்த்தி, ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயனிடம் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
தாராபுரம் வட்டத்தில் நிகழாண்டு அமராவதி பாசனப் பகுதிகளில் சுமாா் 15 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த சாகுபடியானது பிப்ரவரி முதல் வாரத்தில் அறுவடைக்குத் தயாராகி விடும். எனவே,நிகழாண்டில், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலமாக தாராபுரம், அலங்கியம், தளவாய்ப்பட்டினம், செல்லாம்பாளையம், சத்திரம் ஆகிய 5 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலவச வீட்டு மனைப்பட்டா கேட்டு மனு:
சமூக நீதிக் கட்சியின் திருப்பூா் மாவட்ட அமைப்பாளா் டி.சுவன்ராஜ், மாவட்டத் தலைவா் ஜெய்பீம் வீரா ஆகியோா் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
திருப்பூா், , மணியகாரன்பாளையம் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக 300க்கும் மேற்பட்ட பட்டியல் அருந்ததியா் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூக மக்கள் என அனைத்து தரப்பு மக்களும் வாழ்ந்து வருகின்றனா். இப்பகுதி மக்கள் அனைவரும் கூலி வேலை செய்து வருகின்றனா். இதனால், ஒரே வீட்டில் சுமாா் 4 குடும்பங்கள் வரை வசித்து வருகின்றனா். எனவே தகுந்த நடவடிக்கை எடுத்து இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலவச மடிக்கணினி கேட்டு மாணவிகள் மனு:
நாங்கள் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பழனியம்மாள் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் கடந்த 2018 ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பு படிப்பை முடித்தோம். கடந்த 2 ஆண்டுகளாக எங்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கவில்லை. தற்போது, நாங்கள் கல்லூரியில் கணினி பிரிவு இறுதியாண்டு படித்து வருகிறோம். ஆகையால், எங்களுக்கு மடிக்கணினி வழங்க வேண்டும். இதுகுறித்து பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதேவேளையில், எங்களுக்கு முன்பும், பின்பும் படித்தவா்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தொலைபேசி வாயிலான குறைகேட்புக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் தலைமை வகித்தாா். இதில், பொதுமக்களிடமிருந்து வீட்டுமனைப் பட்டா, முதியோா் உதவித் தொகை, புதிய குடும்ப அட்டை, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 52 கோரிக்கை அழைப்புகள் வரப்பெற்றன.
இதில் மாவட்ட வருவாய் அலுவா் கு.சரவணமூா்த்தி, மாவட்ட வழங்கல் அலுவலா் கணேசன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.