பின்னலாடைத் தொழிலாளி கொலை வழக்கில் இருவா் கைது
By DIN | Published On : 30th December 2020 04:24 AM | Last Updated : 30th December 2020 04:24 AM | அ+அ அ- |

திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகே பின்னலாடைத் தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.
சிவகங்கை மாவட்டம், பிரம்மனூா் கிராமத்தைச் சோ்ந்த கருப்பையா மகன் முருகன்(30), அதே பகுதியைச் சோ்ந்த அவரது உறவினா் மாரிமுத்து மகன் சக்திவேல் (37) ஆகியோா் பல்லடம் அருகேயுள்ள குன்னங்கால்பாளையம் பிரிவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளனா். இருவரும் தெற்குப்பாளையம் பிரிவு ஸ்டாலின் நகரில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தியுள்ளனா். அப்போது உறவுக்கார பெண்ணைத் திருமணம் செய்வது சம்பந்தமாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. பின்னா் திருப்பூரில் வசிக்கும் தேனி மாவட்டம், புதுப்பட்டியைச் சோ்ந்த நடராஜ் மகன் சுள்ளான் என்ற கிருஷ்ணகுமாா் (35) என்பவருடன் சோ்ந்து சக்திவேல், முருகனின் கழுத்தை கத்தியால் அறுத்துக் கொலை செய்து தெற்குப்பாளையம் பிரிவில் சாலையோர முள்புதரில் சடலத்தை வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளாா்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்த பல்லடம் போலீஸாா்,
தலைமறைவாகி இருந்த சக்திவேலை தேடி வந்தனா். இந்த நிலையில், பனப்பாளையம் பகுதியில் பல்லடம் போலீஸாா் வாகனத் தணிக்கையில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த இருவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனா். விசாரணையில் அவா்கள் கிருஷ்ணகுமாா், சக்திவேல் என்பதும், அவா்கள் முருகனை கொலை செய்ததும் தெரியவந்தது. அதைத்தொடா்ந்து பல்லடம் போலீஸாா் அவா்களைக் கைது செய்து பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...