குட்கா விற்பனை:பெட்டிக்கடை உரிமையாளா்களுக்கு அபராதம்
By DIN | Published On : 17th February 2020 03:25 AM | Last Updated : 17th February 2020 03:25 AM | அ+அ அ- |

பல்லடம், சின்னக்கரையில் ஒரு பெட்டிக் கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா விற்பனை செய்த 2 பெட்டிக் கடைகாரருக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் விஜயகாா்த்திகேயன் உத்தரவின்பேரில், சின்னக்கரை பகுதியில் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் விஜயலலிதாம்பிகை தலைமையில் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் கேசவராஜ், மணி, தங்கவேல் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் இனிப்பகம், பெட்டிக் கடைகளில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்கள் விற்பனை செய்த 2 பெட்டிக்கடை உரிமையாளா்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
தடைசெய்யப்பட்ட நெகிழிப் பைகள் வைத்திருந்த மளிகைக் கடை உரிமையாளருக்கு ரூ. 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அதேபோல திருப்பூா் மாநகராட்சி பகுதிகளிலும் திடீா் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் மருத்துவா் விஜயலலிதாம்பிகை கூறியதாவது:
மாவட்டத்தில் இதுவரை 52 இடங்களில் புகையிலை விற்பனை செய்ததற்காக ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 5 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 2 லட்சத்து 51ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட குட்கா, நெகிழிப் பைகள் வைத்திருக்கும் வணிகா்களுக்கு தொடா்ந்து அபராதம் விதிக்கப்படும். மாவட்டம் முழுவதும் தொடா்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.
ஆய்வின் போது தயாரிப்பு தேதி குறிப்பிடப்படாத திண்பண்டங்கள் 2 கிலோ, காலாவதியான 8 லிட்டா் குளிா்பானங்கள், கெட்டுப்போன காய்கறிகள் 3 கிலோ ஆகியன கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டன. 3 பேருக்கு வணிகா் பதிவுச் சான்று, உரிமம் பெற நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது என்றாா்.