திருப்பூர் அருகே போலி காவலர் சாலை விபத்தில் பலி
By DIN | Published On : 17th February 2020 06:28 PM | Last Updated : 17th February 2020 06:28 PM | அ+அ அ- |

திருப்பூர்: திருப்பூர் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போலி காவலர் வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
திருப்பூர், மங்கலம் காவல் நிலையத்துக்கு உள்பட்ட 63, வேலம்பாளையம் பகுதியில் காவலர் சீருடையில் ஒருவர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த காவலர் ஒருவர் அவரைத் துரத்தியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த காவலர் சீருடையில் இருந்த அந்த நபர் இருசக்கர வாகனத்தில் தப்பிக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த வேனின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்த தகவலின்பேரில் அங்கு வந்த மங்கலம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் உயிரிழந்தவர் பல்லடம், அனுப்பட்டியைச் சேர்ந்த அஜித்குமார் (23) என்பது தெரிவந்தது. மேலும், அவர் காவலர் போல் சீருடை அணிந்து வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, அவரது சடலத்தை மீட்ட காவல் துறையினர் பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.