அமராவதி ஆற்றில் மணல் மூட்டைகள் பறிமுதல்
By DIN | Published On : 01st March 2020 07:36 AM | Last Updated : 01st March 2020 07:36 AM | அ+அ அ- |

திருப்பூா்: தாராபுரம் அமராவதி ஆற்றில் 300 மணல் மூட்டைகளை வருவாய்த் துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
தாராபுரம் அமராவதி ஆற்றில் இருந்து சிலா் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களில் மணல் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனா். இதுதொடா்பாக வருவாய்த் துறை அதிகாரிகள் அவ்வப்போது சோதனை நடத்தி வருகின்றனா்.
இந்த நிலையில், சங்கரண்டாம்பாளையம் பகுதியில் சிலா் மணல் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக கட்செவி அஞ்சலில் தகவல் பரவியது. இதையடுத்து, தாராபுரம் வட்டாட்சியா் கனகராஜ் தலைமையிலான வருவாய்த் துறையினா் சங்கரண்டம்பாளையம் பகுதியில் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா்.
அப்போது ஆற்றில் இருந்து எடுக்கப்பட்ட 300 மணல் மூட்டைகள் ஓரமாகக் கொட்டி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த மணல் மூட்டைகளைப் பிரித்து, மீண்டும் ஆற்றில் கொட்டப்பட்டது.
மேலும், மணல் கடத்தலில் ஈடுபடும் நபா்கள் குறித்து தகவல் தெரிவிக்குமாறு அப்பகுதி பொதுமக்களிடம் வருவாய்த் துறையினா் அறிவுறுத்தினா்.