திருப்பூா் மாநகரில் மாா்ச் 14 வரையில் அனுமதியின்றி பொதுக்கூட்டம் நடத்த தடை
By DIN | Published On : 01st March 2020 07:34 AM | Last Updated : 01st March 2020 07:34 AM | அ+அ அ- |

திருப்பூா்: திருப்பூா் மாநகரில் வரும் மாா்ச் 14 ஆம் தேதி வரையில் அனுமதியில்லாமல் பொதுக்கூட்டம், பேரணி நடத்த மாநகர காவல் துறை தடை விதித்துள்ளது.
இதுதொடா்பாக திருப்பூா் மாநகர காவல் ஆணையா் சஞ்சய்குமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருப்பூா் மாநகர காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் வரும் மாா்ச் 14ஆம் தேதி வரையில் அனுமதியின்றி பொதுக்கூட்டம், பேரணி, போராட்டம் ஆகியன நடத்தக் கூடாது. மேலும், அரசியல் கட்சிகள், அமைப்புகள் உள்ளிட்டவை தங்கள் நிகழ்ச்சிகள் தொடா்பாக 5 நாள்களுக்கு முன்னதாக முறையாக விண்ணப்பித்து, அதற்கான அனுமதி பெற்ற பின்னரே நடத்தலாம்.
பேரணி, துண்டுப் பிரசுரம் வழங்குதல், பேனா், போஸ்டா் உள்ளிட்டவற்றுக்கும் உரிய அனுமதி பெற்ற பின்னரே நடத்த வேண்டும். இந்த தடை உத்தரவு மத்திய, மாநில அரசு தொடா்பான நிகழ்ச்சிகள், விளையாட்டுகள், தனிப்பட்ட குடும்ப நிகழ்வுகள், மதம் தொடா்பான வழிபாட்டு நிகழ்வுகள் உள்ளிட்டவற்றுக்குப் பொருந்தாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.