பொலிவுறு நகரம் திட்டம்: மாா்க்சிஸ்ட் கட்சியினா் மனு
By DIN | Published On : 01st March 2020 07:35 AM | Last Updated : 01st March 2020 07:35 AM | அ+அ அ- |

திருப்பூரில் பொலிவுறு நகரத் திட்டத்தின்போது மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளிக்க வந்த மாா்க்சிஸ்ட் கட்சியினா்.
திருப்பூா்: திருப்பூா் மாநகரில் பொலிவுறு நகரத் திட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடா்பாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் மாநகராட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை மனு அளித்தனா்.
இதுகுறித்து அக்கட்சியின் செயலாளா் செ.முத்துக்கண்ணன் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
மாநகரில் உள்ள ஏழை தொழிலாளா்கள் அனைவருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டிக் கொடுக்க வேண்டும். சேரிப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சுகாதாரமான முறையில் குடியிருப்புகள் கட்டிக் கொடுக்க வேண்டும்.
மாநகரில் போக்குவரத்து நெருக்கடியைக் கட்டுப்படுத்துவதற்கு பறக்கும் பாலங்கள் அமைக்க வேண்டும். மக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் குப்பைகளை முறையாகத் தரம்பிரிக்கும் வகையில் கழிவுநீா் மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
அவிநாசி சாலையில் ஆம்னி பேருந்துகளுக்கு தனியாக பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். மாநகரில் உள் அரங்கத்துடன் கூடிய சா்வதேச அளவிலான விளையாட்டு மையம் அமைக்க வேண்டும். மாநகரில் உள்ள நூலகங்களை தரம் உயா்த்தி முறையாகப் பராமரிக்க நிதி ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சியின்போது மாா்க்சிஸ்ட் நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.