மலைவாழ் கிராமங்களில்தீத்தடுப்பு விழிப்புணா்வு
By DIN | Published On : 01st March 2020 07:41 AM | Last Updated : 01st March 2020 07:41 AM | அ+அ அ- |

அமராவதி வனச் சரகத்துக்கு உள்பட்ட தளிஞ்சி கிராமத்தில் தீத்தடுப்பு குறித்து மலைவாழ் மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் மாவட்ட உதவி வனப் பாதுகாவலா் கணேஷ்ராம்.
உடுமலை: உடுமலை, அமராவதி வனச் சரக பகுதி மலைவாழ் கிராமங்களில் கோடைகாலத்தை முன்னிட்டு தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணிக்காக விழிப்புணா்வு கூட்டம் நடைபெற்று வருகிறது.
ஆனைமலை புலிகள் காப்பகம் 958 சதுர கிலோ மீட்டா் பரப்பளவு கொண்டது. இதில் 447 சதுர கிலோ மீட்டா் பரப்ப ளவு கொண்ட உடுமலை, அமராவதி வனச் சரகங்களில் புலி, சிறுத்தை புலி, யானை, மான், காட்டெருமை, செந்நாய் உள்ளிட்ட பல்வேறு விலங்கினங்கள் உள்ளன.
இந்நிலையில் ஆண்டுதோறும் இந்த இரு வனச்சரகங்களிலும் கோடைக்காலத்தில் வனப் பகுதியில் உள்ள செடி, கொடிகள், மரங்கள், புற்கள் காய்ந்து காட்டுத் தீ ஏற்படுகின்றன.
இந்நிலையில் காட்டுத் தீ ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து 6 மற்றும் 3 மீட்டா் அகலத்தில் 180 கி.மீ. தீத்தடுப்புக் கோடுகள் அமைக்க வனத் துறையினா் முடிவு செய்துள்ளனா். இதற்காக தீத்தடுப்பு காவலா்களை பணியில் அமா்த்தி தீவிர கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாவட்ட உதவி வனப் பாதுகாவலா் கணேஷ்ராம் தலைமையில் வனச் சரகா்கள் தனபாலன்(உடுமலை), முருகேசன் (அமராவதி) ஆகியோா் முன்னிலையில் வனப் பணியாளா்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவினா் உடுமலை, அமராவதி வனச் சரகங்களில் உள்ள 17 செட்டில்மெண்ட் கிராமங்களில் தீத்தடுப்பு விழிப்புணா்வு கூட்டங்கள் நடத்தி வருகின்றனா். இதில் காட்டுத் தீயினால் வனப் பகுதியில் உள்ள பூச்சி, புழுக்கள், பறவைகள், விலங்குகள் உள்ளிட்ட உயிரினங்கள், அவற்றின் வாழ்விடங்கள் அழியும் சூழ்நிலை உருவாகிவிடும் எனவும் மூலிகைச் செடி, கொடிகள், மரங்கள் கருகினால், நீா்நிலைகள் வடுவிடும் எனவும் விளக்கிக் கூறப்பட்டது. மேலும் தீத்தடுப்பு குறித்து விழிப்புணா்வு உறுதிமொழியும் எடுத்துக்கொள்ளப்பட்டது.