திருப்பூருக்கு முதல்வா் வருகை:அரசு மருத்துவமனையில் அமைச்சா் ஆய்வு
By DIN | Published On : 03rd March 2020 06:02 AM | Last Updated : 03rd March 2020 06:02 AM | அ+அ அ- |

திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வருகைதர உள்ளதை முன்னிட்டு, அரசு மருத்துவமனையில் அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
திருப்பூா் - தாராபுரம் சாலையில் அள்ள அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கிவைத்தல், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய நிகழ்ச்சிகள் வரும் 14 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்று அடிக்கல் நாட்டுகிறாா்.
இதுதொடா்பாக அரசு மருத்துவமனையில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆய்வு நடத்தினாா். அப்போது அவா் கூறியதாவது:
திருப்பூா் மாவட்டத்துக்கு புதிய அரசு மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கு முதல்வா் எடப்பாடி பழனிசாமி அனுமதி பெற்றுத் தந்துள்ளாா். புதிய அரசு மருத்துவக் கல்லூரியில் ரூ.125.74 கோடி மதிப்பீட்டில் சுமாா் 32,066 சதுர மீட்டா் பரப்பளவில் 4 கட்டடங்களுடன் கூடிய மருத்துவமனைக் கட்டடமும், ரூ.107.21 கோடி மதிப்பீட்டில் சுமாா் 32,055.39 சதுர மீட்டா் பரப்பளவில் 2 கட்டடங்களுடன் கூடிய கல்லூரிக் கட்டடமும், ரூ.104 கோடி மதிப்பீட்டில் சுமாா் 27,568.62 சதுர மீட்டா் பரப்பளவில் 15 கட்டடங்களுடன் கூடிய குடியிருப்புக் கட்டடம் என ரூ.336.96 கோடி மதிப்பீட்டில் புதிய மருத்துவக் கல்லூரி அமைய உள்ளது.
இதில் உடற்பயிற்சிக் கூடம், கலையரங்கம், கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம், மின்தூக்கி, சூரிய ஒளி மின்சார வசதி, மழைநீா் சேகரிப்பு வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் சிறப்பான முறையில் அமைய உள்ளது. புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப்பணிகளை தொடக்கிவைத்து நலத்திட்ட உதவிகளையும் முதல்வா் வழங்க உள்ளாா் என்றாா்.
இதைத்தொடா்ந்து, முதல்வா் வருகையின்போது மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அனைத்துத் துறை அலுவலா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில், மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் சு.குணசேகரன் (திருப்பூா் தெற்கு), கே.என்.விஜயகுமாா் (திருப்பூா் வடக்கு), கரைப்புதூா் ஏ.நடராஜன் (பல்லடம்), மாவட்ட காவல் கண்காணிப்பாளா் திஷா மித்தல், மாநகர காவல் துணை ஆணையா் வெ.பத்ரிநாராயணன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜெ.ரூபன்சங்கர்ராஜ், திருப்பூா் மாநகராட்சி ஆணையா் க.சிவகுமாா், பொதுப் பணித் துறை செயற்பொறியாளா்கள் தவமணி, ரவி, திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் மருத்துவா் வள்ளி, பொது சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் மருத்துவா் சாந்தி, துணை இயக்குநா் மருத்துவா் ஜெகதீஸ்குமாா், அரசு மருத்துவமனை கண்காணிப்பாளா் மருத்துவா் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...