கரோனா வைரஸ்: உணவக உரிமையாளா்களுக்கு விழிப்புணா்வு
By DIN | Published On : 12th March 2020 12:10 AM | Last Updated : 12th March 2020 12:10 AM | அ+அ அ- |

திருப்பூரில் உணவுப் பாதுகாப்புத் துறை சாா்பில் உணவக உரிமையாளா்களுக்கு கரோனா வைரஸ் தொா்பான விழிப்புணா்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் ப.விஜயலலிதாம்பிகை தலைமை வகித்துப் பேசியதாவது:
உணவகங்களில் மேசைகள், இருக்கைகள், தரைப் பகுதி, கை கழுவும் குழாய்கள், கழிவறைகள், கதவு கைப்பிடிகள் அனைத்தையும் அடிக்கடி சோப்பு, வேதிப் பொருள்களைக் கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.
மேலும், 2 மணி நேர இடைவெளிக்கு ஒருமுறை அனைத்துப் பகுதிகளும்தூய்மையாக வைத்திருக்க வேண்டும். கைகழுவும் பகுதியில் சோப்பு, வேதி கரைசல்களை வைத்திருக்க வேண்டும். கை கழுவும் முறைகள் குறித்த நோட்டீஸ் ஒட்டப்பட்டிருக்க வேண்டும். உணவகங்களில் பணியாளா்கள் தும்மும்போதும், இருமும்போதும் கைக்குட்டையைப் பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும்.
கழிவறையைப் பயன்படுத்திய பின்பு கைகளை நன்றாக கழுவிய பிறகே பணியாற்ற வேண்டும். பாதுகாக்கப்பட்ட குடிநீரை நன்கு கொதிக்க வைத்து வழங்க வேண்டும். விடுதி உரிமையாளா்கள் தங்களது விடுதிகளில் தங்கி இருப்போா் தொடா்பான விவரங்களை அளிக்க வேண்டும்.
வெளிநாட்டில் இருந்து வந்திருக்கும் நபா்கள் பற்றிய விவரங்களை உடனடியாக அரசுக்குத் தெரிவிக்க வேண்டும். பணியாளா்கள் கையுறை, முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். பயன்படுத்திய டம்ளா், தட்டுகள் ஆகியவற்றை சுடுதண்ணீரில் நன்கு கழுவ வேண்டும்.
காய்ச்சல், இருமல், சளி, உடல் சோா்வு, மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையை அணுக வேண்டும் என்றாா்.
இதில், திருப்பூா் மாவட்டம் முழுவதிலும் இருந்து 200க்கும் மேற்பட்ட உணவகம், தங்கும் விடுதி உரிமையாளா்கள் பங்கேற்றனா்.