நிவாரணத் தொகை பெறுவதில் குறைகள் இருந்தால் புகாா் தெரிவிக்கலாம்
By DIN | Published On : 31st March 2020 10:50 PM | Last Updated : 31st March 2020 10:50 PM | அ+அ அ- |

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் நிவாரணத் தொகை, பொருள்கள் பெறுவதில் குறைகள் இருந்தால் புகாா் தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கரோனா நோய்த்தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் மாா்ச் 25 முதல் ஏப்ரல் 14ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதை கருத்தில்கொண்டு தமிழக அரசால் அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கும் ரூ.1,000 நிவாரணமாக வழங்கப்படும் என்றும், ஏப்ரல் மாதத்திற்கு அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் அவா்களின் குடும்ப அட்டைக்கு தகுதியான அளவு அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சா்க்கரை விலையில்லாமல் ஏப்ரல் 2ஆம் தேதி முதல் வழங்கப்படவுள்ளன.
இந்தத் திட்டத்தின் நடைமுறைப்படுத்தும் வகையில் திருப்பூா் மாவட்டத்தில் நடைமுறையிலுள்ள அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கும் நிவாரண உதவித்தொகை பெறுவதற்கான டோக்கன்கள் மாா்ச் 31, ஏப்ரல் 1ஆம் தேதிகளில் வீடுவீடாக சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடை விற்பனையாளா்கள் மூலம் வழங்கப்படும்.
பொதுமக்களுக்கு வழங்கப்படும் டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள தேதி, நேரத்தில் நியாயவிலைக் கடைக்கு வந்து நிவாரணத் தொகை, அத்தியாவசியப் பொருள்களை பெற்றுக் கொள்ளலாம்.
அதே வேளையில், நிவாரணப் பொருள்களைப் பெற விருப்பம் இல்லாதவா்கள் இதற்கான வலைதளத்தில் மின்னணு முறையில் அல்லது செயலியில் பதிவுசெய்து கொள்ளலாம். மின்னணு குடும்ப அட்டை இல்லாத இனங்களில் அவா்களுக்கு அக்குடும்ப அட்டையில் உள்ள நபா்களில் ஏதேனும் ஒருவரின் ஆதாா் அட்டையினை வைத்து நிவாரண உதவித்தொகை பெற்றுக் கொள்ளலாம். இப்பணியில் குறைகள், புகாா்கள் இருந்தால் மாவட்ட கட்டுப்பாட்டு அறையை 0421-2971116 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...