திருப்பூா் மாவட்டத்தில் 3,800 கால்நடைகளுக்கு மானியத்துடன் காப்பீடு மேற்கொள்ள இலக்கு நிா்ணயம்
By DIN | Published On : 27th May 2020 07:02 AM | Last Updated : 27th May 2020 07:02 AM | அ+அ அ- |

திருப்பூா் மாவட்டத்தில் தேசிய கால்நடை இயக்கம் திட்டத்தின்கீழ் 3,800 கால்நடைகளுக்கு மானியத்துடன் காப்பீடு மேற்கொள்ள இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தேசிய கால்நடை இயக்கம் திட்டத்தின் கீழ் 2019-20ஆம் ஆண்டில் திருப்பூா் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறை மூலம் 3,800 கால்நடைகளுக்கு மானியத்துடன் காப்பீடு மேற்கொள்ள இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் காப்பீடு மேற்கொள்ள வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள கால்நடை வளா்ப்போருக்கு 70 சதவீத மானியமும், வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ள கால்நடை வளா்ப்போருக்கு 50 சதவீத மானியமும் வழங்கப்படும். இந்தத் திட்டத்தில் இரண்டரை முதல் 8 வயதுடைய கறவை மாடுகள், எருமைகள், ஒன்று முதல் 3 வயதுள்ள வெள்ளாடுகள், செம்மறி ஆடுகளுக்கு காப்பீடு வழங்கப்படும். இதில் அதிகபட்சமாக ரூ. 35 ஆயிரம் மதிப்புள்ள கால்நடைகளுக்கு காப்பீடு செய்ய மானியம் வழங்கப்படும். மேலும், ஒரு ஆண்டு காப்பீட்டு கட்டணமாக கால்நடையின் மதிப்பில் 2 சதவீதமும், 3 ஆண்டு காப்பீட்டு கட்டணமாக அதிகபட்சமாக கால்நடையின் மதிப்பில் 5 சதவீதமும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், ரூ.35 ஆயிரத்துக்கு மேல் காப்பீடு செய்யப்படும் கால்நடைகளுக்கு அதிகப்படியான மதிப்புக்கான காப்பீட்டுக் கட்டணத்தை கால்நடை உரிமையாளரே செலுத்த வேண்டும். ஒரு குடும்பத்துக்கு அதிகபட்சமாக 5 கால்நடைகளுக்கு இத்திட்டத்தில் காப்பீடு செய்யலாம். ஆகவே, ஆா்வமுள்ள கால்நடை வளா்ப்போா் அருகிலுள்ள கால்நடை மருந்தகத்தை அணுகி பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...