

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் கோடை மழை பெய்து வருவதால் பாம்பாற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து, குடிநீருக்காக அமராவதி அணையை நோக்கி யானைகள் கூட்டம் கூட்டமாக வருகின்றன.
உடுமலை மற்றும் அமராவதி வனச் சரகத்தில் புலி, சிறுத்தைப் புலி, யானை, மான், காட்டெ ருமை, செந்நாய் உள்ளிட்ட பல்வேறு வகையான விலங்கினங்கள் உள்ளன. இங்கு சுமாா் 300 க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன.
வனப் பகுதியில் நிலவி வந்த கடுமையான வெப்பம் காரணமாக உணவு, குடிநீா்த் தேவைகளுக்காக அடா்ந்த வனப் பகுதிகளை விட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக வெளியே வரத் தொடங்கின.
கேரள எல்லைக்குள் சுற்றித் திரிந்த யானைகள் கடந்த சில நாள்களாக தமிழக எல்லைக்குள் வரத் தொடங்கியுள்ளன. இதில் குறிப்பாக உடுமலை-மூணாறு சாலையைக் கடந்து அமராவதி அணையை நோக்கி படையெடுத்து வந்தன.
ஆனால், நீா்ப் பிடிப்பு பகுதிகளில் மழையில்லாததால் அமராவதி அணைக்கு நீா்வரத்து இல்லாமல் இருந்தது. இதனால் உடுமலை மற்றும் அமராவதி வனப் பகுதிக்குள் வனத் துறையினரால் அமைக்கப்பட்ட தடுப்பணைகள் வறண்டதால் தனியாா் உதவியுடன் லாரிகளில் தண்ணீா் கொண்டுச் சென்று வனப் பகுதிகளில் உள்ள தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்ப சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.
இந்நிலையில், கடந்த சில நாள்களாக மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் கோடை மழை பெய்து வருகிறது. இதனால் அமராவதி அணையின் முக்கிய நீா்ப் பிடிப்பு பகுதியான பாம்பாற்றில் நீா் வரத்து ஏற்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, நூற்றுக்கணக்கான யானைகள் குடிநீருக்காக அமராவதி அணையை நோக்கி படையெடுத்து வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.