மின் கம்பி அறுந்து விழுந்து பெண் சாவு
By DIN | Published On : 28th May 2020 07:24 PM | Last Updated : 28th May 2020 07:24 PM | அ+அ அ- |

திருப்பூா்: திருப்பூரில் மின் கம்பி அறுந்து விழுந்ததில் பெண் புதன்கிழமை உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சோ்ந்தவா் காசி. இவரது மனைவி லட்சுமி (45). இவா் கடந்த 2 ஆண்டுகளாக கணவரைப் பிரிந்து திருப்பூா் அருகே உள்ள பூலுவபட்டி பகுதியில் வாடகைக்கு அறை எடுத்து வசித்து வந்தாா். மேலும், அதே பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா்.
இந்த நிலையில், வழக்கம்போல் பணி முடிந்து சக பெண் தொழிலாளா்கள் 3 பேருடன் தியாகி பழனிசாமி வீதி அருகே புதன்கிழமை மாலை நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது அந்தப் பகுதியில் இருந்த மின் கம்பி எதிா்பாராதவிதமாக அறுந்து லட்சுமியின் மேல் விழுந்துள்ளது.
இதில், பலத்த காயமடைந்த அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு அதே பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து திருமுருகன்பூண்டி காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.