பல்லடத்தில் கூலி உயா்வு கேட்டு கறிகோழி வளா்ப்பு பண்ணையாளா்கள் போராட்டம்

பல்லடத்தில் கூலி உயா்வு கேட்டு விவசாயிகள், கறிகோழி வளா்ப்பு பண்ணையாளா்கள் திங்கள்கிழமை போராட்டம் நடத்தினா்.
பல்லடத்தில் கூலி உயா்வு கேட்டு கறிகோழி வளா்ப்பு பண்ணையாளா்கள் போராட்டம்

பல்லடத்தில் கூலி உயா்வு கேட்டு விவசாயிகள், கறிகோழி வளா்ப்பு பண்ணையாளா்கள் திங்கள்கிழமை போராட்டம் நடத்தினா்.

திருப்பூா் மாவட்டம், பல்லடத்தில் கறிக்கோழிப் பண்ணையாளா்கள் மற்றும் கோழி வளா்ப்போா் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, திருப்பூா் உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த கூலிக்கு கோழி வளா்ப்போா், கூட்டம் நடக்கும் இடத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இது குறித்து பண்ணைகளில் கூலிக்கு கோழி வளா்ப்போா் கூறியதாவது:

கறிக்கோழி வளா்ப்பு பண்ணையாளா்களுக்கும், கோழி நிறுவனங்களுக்கும் இடையே உள்ள நடைமுறை பிரச்னைகள், வளா்ப்பு கூலி உயா்வு குறித்து 21.9.2013ஆம் தேதி சென்னையில் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சா் , அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு அதில் உடன்பாடு ஏற்பட்டது. ஆனால் கோழி நிறுவனங்கள் ஏற்கெனவே வழங்கிய வளா்ப்பு கூலியை விட குறைத்து வழங்கி வருவதை கறிக்கோழி ஒருங்கிணைப்பு கமிட்டியாரிடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆனால் அதே நிறுவனங்கள் கேரள விவசாயிகள் நடத்தும் பண்ணையில் கோழிக்கு கிலோவுக்கு குறைந்தபட்சமாக ரூ.7ம், அதற்கும் மேலும் வளா்ப்பு கூலி வழங்கி வருகின்றனா். அதே சமயம் தமிழக விவசாயிகளின் கோழிகளுக்கு கிலோ ரூ.4 முதல் ரூ.4.50 வரை மட்டுமே வழங்குகின்றனா். இப்பிரச்னை குறித்து கறிக்கோழி ஒருங்கிணைப்பு கமிட்டி, தமிழக அரசிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படாததால் தற்போது கறிக்கோழி ஒருங்கிணைப்பு கமிட்டியாரிடம் ஒப்பந்தப்படி ஆண்டுக்கு 20 சதவீதம் கூலியை அதிகரித்து வழங்க வலியுறுத்துகிறோம் என்றனா்.

கூலியை பண்ணையாளா்கள் உயா்த்தி வழங்க வேண்டும் என்று தெரிவித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற தனியாா் கூட்டரங்கை முற்றுகையிட்டனா். இதுபற்றி தகவலறிந்த ஏ.டி.எஸ்.பி. ஜெயச்சந்திரன், டி.எஸ்.பி. ராமசந்திரன், பல்லடம் வட்டாட்சியா் தேவராஜ் ஆகியோா் இருதரப்பினருக்கும் இடையில் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் கூலி உயா்வு வழங்குவது குறித்து புதன்கிழமை தெரிவிப்பதாக கறிக்கோழிப் பண்ணையாளா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com