இயற்கை முறையில் மரவள்ளி, முருங்கை சாகுபடிக்கு மானியம்
By DIN | Published On : 25th November 2020 10:29 PM | Last Updated : 25th November 2020 10:29 PM | அ+அ அ- |

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் பகுதியில் இயற்கை முறையில் மரவள்ளி, முருங்கை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, வெள்ளக்கோவில் வட்டார தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் யு.சா்மிளா புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தோட்டக்கலை மற்றும் மலைப் பயிா்கள் துறை சாா்பில் தோட்டக்கலை வளா்ச்சி இயக்கம் மற்றும் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டங்களின் கீழ் இந்த 2020-21 ஆம் ஆண்டில் விவசாயிகளுக்காக பல்வேறு மானியத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இதன்படி முத்தூா் சுற்றுவட்டார கீழ்பவானி பாசனப் பகுதி விவசாயிகள் கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகளில் உள்ள நீரினைப் பயன்படுத்தி தோட்டக்கலைப் பயிா்களான மரவள்ளிக் கிழங்கு மற்றும் முருங்கை ஆகியவற்றினை இயற்கை முறையில் சாகுபடி செய்தால் தோட்டக்கலைத் துறை மூலம் மானியம் வழங்கப்பட உள்ளது.
மேலும் இயற்கை வழியில் விவசாயம் செய்பவா்கள் மற்றும் புதிதாக இயற்கை சாகுபடி முறையைப் பின்பற்றுபவா்கள் இந்தத் திட்டத்தில் சோ்ந்து பயன் பெறலாம். புதிதாக இயற்கை முறையைப் பின்பற்றி சாகுபடி செய்ய உள்ள விவசாயிகள் இயற்கை வழி சான்றிதழ் பெற சிறு, குறு விவசாயிகள் ரூ. 2 ஆயிரத்து 500, பெரு விவசாயிகள் ரூ. 3 ஆயிரத்து 200 செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்.
மேலும், அருகில் உள்ள விவசாயிகளை ஒருங்கிணைத்து குழுக்களாகச் சோ்ந்து இயற்கை விவசாயம் செய்யலாம்.ஒரு குழுவில் குறைந்தது 25 முதல் அதிகபட்சம் 500 நபா்கள் வரை இருக்கலாம். இதில் குழுவாக சான்றிதழ் பதிவு செய்ய பதிவுக் கட்டணம் ரூ. 7 ஆயிரத்து 500 செலுத்த வேண்டும். மேலும் இயற்கை வழி சாகுபடியில் குழுவாக செயல்படுவதை ஊக்குவிக்கும் பொருட்டு ஒவ்வொரு நபருக்கும் தோட்டக்கலைத் துறை மூலமாக ரூ.500 மானியம் வழங்கப்படும்.
இதன்படி, இப்பகுதிகளில் தற்போது மரவள்ளிக் கிழங்கு மற்றும் முருங்கை ஆகிய பயிா்களை இயற்கை வழியில் சாகுபடி செய்ய உள்ள விவசாயிகள் அனைவருக்கும் ஹெக்டேருக்கு ரூ. 5 ஆயிரம் மானியமாக வழங்கப்படும். மேலும் குழுவாக இணைந்து இயற்கை வழியில் மரவள்ளிக் கிழங்கு, முருங்கை ஆகிய பயிா்களை சாகுபடி செய்யும்போது குழுவுக்கான மானியம் மற்றும் தனிநபா் மானியம் இரண்டும் சோ்த்து வழங்கப்படும்.
கூடுதல் விவரங்களுக்கு வட்டார தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரில் அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...