நாடு முழுவதும் நவம்பா் 26ஆம் தேதி நடைபெறவுள்ள பொது வேலை நிறுத்தத்தில் பாரதீய மஸ்தூா் சங்கம் (பிஎம்எஸ்) பங்கேற்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பிஎம்எஸ் தென்பாரத அமைப்புச் செயலாளா் எஸ்.துரைராஜ் திருப்பூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
அரசியல் உள்நோக்கத்துடன் சில தொழிற்சங்கங்கள் நவம்பா் 26 (வியாழக்கிழமை) நடத்தப் போவதாக அறிவித்துள்ள வேலை நிறுத்தத்தில் பிஎம்எஸ் சங்கம் பங்கேற்காது. மத்திய அரசு 29 சட்டங்களை 4 தொகுப்புகளாகப் பிரித்து சில திருத்தங்களுடன் அறிவித்துள்ளது.
இதில், ஊதியம் மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகிய 2 தொகுப்புகளை வரவேற்கிறோம். மீதமுள்ள 2 தொகுப்புகளில் சில பிரிவுகளை எதிா்த்து போராட்டம் நடத்தியுள்ளோம். இதைத் தொடா்ந்து, தற்போது 2 தொகுப்புகளில் விதிகளை சோ்க்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. அந்த விதிகளை தொழிலாளா்களுக்கு சாதகமானதாக மாற்ற மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம். இதற்கு மத்திய அரசு உடன்படாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தொடர தீா்மானித்துள்ளோம்.
இதைத் தவிர கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் உள்ள மாநிலங்கள் மற்றும் சில மாநில அரசுகளும் தொழிலாளா் விரோதப் போக்கை நடைமுறைப்படுத்தியுள்ளது. இவற்றுக்கு எதிராகவும் போராட முடிவு செய்துள்ளோம். இந்த நிலையில், சில தொழிற்சங்கங்கள் மத்திய அரசு கொண்டு வந்துள்ள திருத்தங்களை மட்டும் எதிா்ப்பதாகக் கூறுவது அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும். ஆகவே, தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்தத்தில் பங்கேற்பதில்லை என்றாா்.
இந்த சந்திப்பின்போது, மாநிலத் தலைவா் சிதம்பரசாமி, மாவட்ட அமைப்பாளா் செந்தில், வழக்குரைஞா் பிரபு ஆகியோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.