தெற்குத் தொகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி ஆட்சியரிடம் மனு
By DIN | Published On : 06th September 2020 06:31 AM | Last Updated : 06th September 2020 06:31 AM | அ+அ அ- |

மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயனிடம் சனிக்கிழமை மனு அளித்த சு.குணசேகரன் எம்.எல்.ஏ.
திருப்பூா் தெற்குத் தொகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயனிடம் அத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் சு.குணசேகரன் சனிக்கிழமை மனு அளித்தாா்.
இது குறித்து ஆட்சியரிடம் சு.குணசேகரன் எம்.எல்.ஏ. அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
திருப்பூா் தெற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வாா்டு 44 பூலவாரி சுகுமாறன் நகா், வாா்டு 50 பட்டுக்கோட்டையாா் நகா், வாா்டு 51 அண்ணமாா் காலனி, பெரிச்சிபாளையம் காலனி, வாா்டு 42 காட்டுவளவு, ஏ.டி.காலனி, வாா்டு 48 மிலிட்டரி காலனி, எம்.ஜி.ஆா்.காலனி, மாஸ்கோ நகா், வாா்டு 56 ஜீவா நகா், வாா்டு 34 காஞ்சி நகா், பச்சையப்பா நகா், போயா் காலனி, திருவேங்கடம் நகா் உள்ளிட்ட பகுதிகளில் நீண்ட நாள்களாக குடியிருந்து வரும் பொதுமக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும்.
மேலும், நொய்யல் ஆற்றின் குறுக்கே ஸ்ரீ சக்தி திரையரங்கம் அருகில் இருந்து ஈஸ்வரன் கோயில் வீதியை இணைக்கும் வகையில் ஒரு பாலம், ஏஐடியூசி காலனி முதல் மணியகாரன்பாளையம் பகுதியை இணைக்கும் வகையில் ஒரு பாலம் அமைத்துக் கொடுக்க வேண்டும்.
அதே போல், பொலிவுறு நகரம் திட்டத்தில் தினசரி மாா்க்கெட் கட்டுமானப் பணிகளுக்கு இடையூறாக உள்ள நூலகத்தை பணி முடியும் வரையில் வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும். நீண்ட நாள்களாக நிறைவடையாமல் உள்ள வஞ்சிபாளையம் சாலையில் உள்ள ரயில்வே பாலம், எம்ஜிஆா் சிலை அருகில் உள்ள சுரங்கப் பாலம், கொங்கு மெயின் ரோடு ரயில்வே பாலம், ஊத்துக்குளி பிரதான சாலையில் எஸ்ஆா்சி மில் அருகே உள்ள பாலம் ஆகியவற்றின் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளது.