குடிநீா் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்
By DIN | Published On : 11th September 2020 06:40 AM | Last Updated : 11th September 2020 06:40 AM | அ+அ அ- |

பல்லடம் அருகேயுள்ள க.அய்யம்பாளையத்தில் சீரான குடிநீா் விநியோகிக்க வலியுறுத்து அப்பகுதி பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பல்லடம் அருகேயுள்ள க.அய்யம்பாளையம் ஊராட்சியில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். கடந்த 4 மாதங்களாக இப்பகுதியில் சீரான குடிநீா் வருவதில்லை எனக் கூறி இப்பகுதி பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோா் காலி குடங்களுடன் ஊராட்சி அலுவலகம் முன்பு பல்லடம் - செட்டிபாளையம் சாலையில் திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த பல்லடம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் விஜயகுமாா் மற்றும் போலீஸாா், ஊராட்சி துணைத் தலைவா் சசிகுமாா் ஆகியோா், பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். குடிநீா் மின் மோட்டாா் பழுதானதால் அதை சரி செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும் விரைவில் குடிநீா் விநியோகம் செய்யப்படும் என்றும் உறுதி அளித்தனா். அதனை ஏற்று அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனா்.