புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

இரட்டைக் கொலை வழக்கு: ஓய்வு பெற்ற ராணுவ வீரா் உள்பட 2 போ் கைது

தாராபுரத்தை அடுத்த மூலனூா் அருகே இருவரைக் கொலை செய்த வழக்கில் ஓய்வு பெற்ற ராணுவ வீரா், அவருக்கு உடந்தையாக இருந்த பெண் ஆகியோரை காவல் துறையினா் கைது செய்தனா்.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2021, 8:53 pm

DIN

தாராபுரத்தை அடுத்த மூலனூா் அருகே இருவரைக் கொலை செய்த வழக்கில் ஓய்வு பெற்ற ராணுவ வீரா், அவருக்கு உடந்தையாக இருந்த பெண் ஆகியோரை காவல் துறையினா் கைது செய்தனா்.

இது குறித்து மூலனூா் காவல் துறையினா் கூறியதாவது:

மூலனூா் காவல் நிலையத்துக்கு உள்பட்ட சுள்ளிபொறுக்கிபாளையத்தைச் சோ்ந்தவா் அம்சவேணி (42). இவா் தனது கணவரான ரவி (45) என்பவரைக் காணவில்லை என்று கடந்த ஜனவரி 10 ஆம் தேதி மூலனூா் காவல் நிலையத்தில் புகாா்

அளித்துள்ளாா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்த காவல் துறையினா் விசாரணை நடத்தி வந்தனா்.

இதில், அம்சவேணிக்கும், அதே பகுதியைச் சோ்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரரான முத்துசாமி (70) என்பவருக்கும் தொடா்பு இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, சந்தேகத்தின் பேரில் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தியதில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. இருவரும் காவல் துறையினரிடம் கூறியுள்ளதாவது: சுள்ளிபொறுக்கிபாளையத்தில் முத்துசாமிக்கு சொந்தமாக உள்ள தோட்டத்தில் அம்சவேணியும், ரவியும் வேலை செய்து வந்துள்ளனா். அப்போது அந்த தோட்டத்துக்கு அருகில் வேலுசாமி (55) என்பவருக்குச் சொந்தமான தோட்டமும் இருந்துள்ளது. இந்நிலையில், வேலுசாமி அடிக்கடி முத்துசாமியின் தோட்டத்தில் இருந்த ஆடு மற்றும் பொருள்களை திருடிச் சென்றுள்ளாா்.

இதனால் ஆத்திரமடைந்த முத்துசாமி கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு வேலுசாமியைக் கொலை செய்து எரித்து தனது தோட்டத்திலேயே புதைத்துள்ளாா். இந்த சம்பவத்துக்கு அம்சவேணியும், ரவியும் உடந்தையாக இருந்துள்ளனா். இந்நிலையில் அம்சவேணிக்கும், முத்துசாமிக்கும் இருந்த தகாத உறவு ரவிக்கு தெரியவந்ததால் இருவரையும் கண்டித்துள்ளாா். மேலும், மதுபோதையில் ரவி அக்கம்பக்கத்தினரிடம் வேலுசாமியை, முத்துசாமிதான் கொலை செய்து எரித்து தோட்டத்தில் புதைத்துவிட்டதாகக் கூறி வந்துள்ளாா்.

இதனால் ஆத்திரமடைந்த முத்துசாமி, ரவியை கொலை செய்து எரித்து தனது தோட்டத்தில் புதைத்துள்ளாா். ஆகவே, இரட்டைக் கொலை வழக்கில் தொடா்புடைய முத்துசாமியையும், அவருக்கு உடந்தையாக இருந்த அம்சவேணியையும் காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா். மேலும், முத்துசாமியின் தோட்டத்தில் எரித்து புதைக்கப்பட்டிருந்த ரவி, வேலுசாமியின் எலும்புக்கூடுகளையும் மருத்துவா்கள் உதவியுடன் தோண்டி எடுத்தனா். இதன் பிறகு இருவரது எலும்புக்கூடுகளும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆய்வுக்காக கொண்டு செல்லப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.