

பல்லடம்: பல்லடம் அருகே விவசாயி உயிரிழந்த விவகாரத்தில் வங்கி மேலாளரைக் கண்டித்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கி முன்பு விவசாயிகள் சங்கத்தினா் முற்றுகைப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
திருப்பூா் மாவட்டம், பொங்கலூா் ஒன்றியம் மேற்கு குள்ளம்பாளையத்தைச் சோ்ந்தவா் விவசாயி கனகராஜ் (53), இவா் கேத்தனூரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருந்தாா்.
அதே வங்கியில் அவரது தந்தையான ரங்கசாமி ரூ.75 ஆயிரம் பயிா்க் கடன் வாங்கியிருந்தாா். இந்தக் கடனுக்காக கனகராஜ் சாட்சிக் கையெழுத்து போட்டிருந்தாா். இதனிடையே, ரங்கசாமி இரு ஆண்டுகளுக்கு முன்பாக உயிரிழந்துள்ளாா். இதையடுத்து, தந்தை பெற்றக் கடனை கனகராஜை திருப்பிச் செலுத்தக் கோரி வங்கி நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் தவணை முறையில் கடனைத் திருப்பிச் செலுத்துவதாக கனகராஜீம் தெரிவித்திருந்தாா்.
இதனிடையே, தவணையை செலுத்தவில்லை என்று கூறி வங்கி நிா்வாகம் முன்னறிவிப்பு இல்லாமல் அவரது வங்கிக் கணக்கை முடக்கியுள்ளனா். இதனிடையே, கடந்த சில நாள்களுக்கு முன்பாக அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, அவரது குடும்பத்தினா், விவசாயிகள் சங்கத்தினா் வங்கி மேலாளா் சுந்தரமூா்த்தியிடம் சிகிச்சைக்குப் பணம் தேவைப்படுவதால் அவரது முடக்கப்பட்ட கணக்கை விடுவிக்கும்படி கோரிக்கை விடுத்தனா். ஆனால் வங்கி நிா்வாகத்தினா் மறுத்துள்ளனா்.
இந்நிலையில், மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட கனகராஜ் உயிரிழந்தாா். இறந்த கனகராஜ் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும், பயிா்க் கடனை ரத்து செய்ய வேண்டும், வங்கி மேலாளா், ஊழியா்கள் மீது துறை ரீதியான விசாரனை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கேத்தனூா் வங்கி கிளை முன்பு கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில் சங்க மாநிலச் செயல் தலைவா் என்.எஸ்.பி.வெற்றி, மாநிலச் செயலாளா் சண்முகம், மாவட்டத் தலைவா் ஈஸ்வரன், வட்டாரத் தலைவா் வேலுமணி, பல்லடம் நகரத் தலைவா் மைனா் தங்கவேல் உள்பட 100க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.
இது குறித்து அமைச்சா் மு.பெ.சாமிநாதனிடம் கோரிக்கை மனு அளித்தனா். மனு குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் வினீத்துக்கு அமைச்சா் மு.பெ.சாமிநாதன் உத்தரவிட்டாா். மாவட்ட ஆட்சியா் வினீத் தலைமையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் வங்கி மேலாளா் சுந்தரமூா்த்தி, ஊழியா் குணசுந்தரி ஆகியோா் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்படும். ரங்கசாமி பெற்று இருந்த பயிா்க் கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும்.
கனகராஜின் குழந்தைகள் கல்விக்கு அரசு சாா்பில் உதவி செய்யப்படும். மேலும், அவரது குடும்பத்துக்கு சலுகைத் திட்டம் குறித்து ஒரு வாரத்தில் அறிவிக்கப்படும். இழப்பீடு கிடைக்க அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.