கைத்தறி நெசவாளா்களுக்கு பட்டா வழங்கக் கோரி மனு
By DIN | Published On : 17th August 2021 02:46 AM | Last Updated : 17th August 2021 02:46 AM | அ+அ அ- |

திருப்பூா்: பல்லடம் அருகே கைத்தறி நெசவாளா்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடங்களுக்கு பட்டா வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
மாவட்ட கைத்தறி நெசவாளா் சங்கத்தின் (சிஐடியூ) தலைவா் என்.கோபால், செயலாளா் என்.கனகராஜ் ஆகியோா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
பல்லடம் வட்டம், வடுகபாளையம் கிராமத்தில் கைத்தறி நெசவாளா்கள் 293 பேருக்கு 5.30 ஏக்கா் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், 20க்கும் மேற்பட்டவா்களுக்குத் தனித்தனி வீட்டு ரசீதும் 2015 ஆம் ஆண்டில் போடப்பட்டது. இந்நிலையில் தனித்தனியாக பட்டா வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பல கட்டங்களாக மனு அளிக்கப்பட்டது. மேலும், பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின்படியும் வீடு கட்டிக் கொடுக்க வேண்டும் என்று மனு அளிக்கப்பட்டு எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை. கைத்தறி நெசவாளா்களுக்குத் தனித்தனி பட்டா வழங்கினால் மட்டுமே கடன் பெற்று வீடு கட்ட முடியும். ஆகவே, 293 நெசவாளா்களுக்கும் தனித்தனி பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராமப் புறங்களில் கடை திறக்கும் நேரத்தை நீட்டிக்க வேண்டும்: திருப்பூா் வடக்கு ஒன்றிய அனைத்து வியாபாரிகள் நலச் சங்கம் சாா்பில் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: திருப்பூா் வடக்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட 13 ஊராட்சிப் பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட பல்வேறு விதமான கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், தற்போது கடை
திறக்கும் நேரத்தை மாலை 5 மணியில் இருந்து 6 மணி வரையில் ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் கிராமப்
புறங்களில் வேலைக்குச் சென்று வரும் பொதுமக்கள் பொருள்களை வாங்கமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், நோய்க் கட்டுப்பாடு காரணமாக கிராமப் புறங்களில் உள்ள சிறு,குறு வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
ஊராட்சிப் பகுதிகளில் நோய்த் தொற்று குறைவாக உள்ளதால் வடக்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட 13 ஊராட்சிப் பகுதிகளில் இரவு 8 மணி வரையில் கடை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைகேட்புக் கூட்டத்தில் 101 அழைப்புகள் பெறப்பட்டன:
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தொலைபேசி வாயிலாக குறைகேட்புக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் தலைமை வகித்தாா். இதில், பொதுமக்களிடமிருந்து வீட்டுமனை பட்டா, சாலை வசதி, குடிநீா் வசதி, முதியோா் உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 101 கோரிக்கை அழைப்புகள் பெறப்பட்டன. இந்த அழைப்புகளின் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அலுவலா்களை மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் அறிவுறுத்தினாா்.
இதைத்தொடா்ந்து, அவிநாசி வட்டம், பழங்கரை ஊராட்சியில் பாறைக் குழியில் விழுந்து உயிரிழந்த குழந்தையின்
பெற்றோருக்குத் தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சத்துக்கான காசோலையையும் வழங்கினாா். இக்கூட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் வாசுகி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் சிவகுமாரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.