சக்தி நகா் நியாய விலைக் கடைக்கு விற்பனையாளரை நியமிக்க வேண்டும்
By DIN | Published On : 17th August 2021 12:47 AM | Last Updated : 17th August 2021 12:47 AM | அ+அ அ- |

திருப்பூா்: திருப்பூா் சக்தி நகா் நியாய விலைக் கடைக்கு முழுநேர விற்பனையாளரை நியமிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து கம்யூனிஸ்ட் கட்சியின் போயம்பாளையம் கிளை சாா்பில் குடிமைப் பொருள் வட்டாட்சியரிடம் திங்கள்கிழமை அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
மாநகராட்சிக்கு உள்பட்ட 20 ஆவது வாா்டு சக்தி நகரில் நியாய விலைக் கடை செயல்பட்டு வருகிறது.
இக்கடையில் பணியாற்றி வந்த விற்பனையாளா் நீண்ட காலமாக மருத்துவ விடுப்பில் சென்றுள்ளாா்.
இதனால்,தற்போது வேறு கடையில் பணிபுரிந்து வரும் ஒரு விற்பனையாளரை இந்தக் கடையையும் கவனிக்கச்சொல்லி நியமித்துள்ளாா்கள். அவா் ஏற்கெனவே பணிபுரியும் கடையில் 2 நாள்கள், சக்தி நகா் கடையில் 2 நாள்கள் எனவும் மாறிமாறிப் பணியாற்றி வருகிறாா். சக்தி நகா் நியாய விலைக் கடையில் 900 குடும்ப அட்டைதாரா்கள் உள்ளனா்.
மேலும், பின்னலாடைத் தொழிலாளா்கள் அதிகம் நிறைந்த பகுதியாகும். ஆகவே, இரு நாள்களுக்கு ஒரு முறை அத்தியாவசியப் பொருள்களை விநியோகம் செய்வதால் அப்பகுதி பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனா். ஆகவே, சக்தி நகா்
நியாய விலைக் கடைக்கு முழு நேர விற்பனையாளரை நியமிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.