ஈரோடு-பழனி ரயில் பாதை அமைக்கும் திட்டத்திற்கு நடவடிக்கை: எல்.முருகன்

ஈரோட்டில் இருந்து தாராபுரம் வழியாக பழனிக்கு ரயில் பாதை அமைக்கும் திட்டம் தொடங்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று மத்திய அணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
தாராபுரம் அண்ணா சிலை முன்பாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசுகிறார் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், (உடன்)பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர்.
தாராபுரம் அண்ணா சிலை முன்பாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசுகிறார் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், (உடன்)பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர்.

திருப்பூர்: ஈரோட்டில் இருந்து தாராபுரம் வழியாக பழனிக்கு ரயில் பாதை அமைக்கும் திட்டம் தொடங்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று மத்திய அணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லும் விதமாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் 3 நாள் மக்கள் ஆசி யாத்திரையை கோவையில் கடந்த திங்கள்கிழமை தொடங்கினார். இந்த யாத்திரையின் 2 ஆவதுநாளான செவ்வாய்க்கிழமை தாராபுரம் அண்ணாசிலை முன்பாக பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்தக்கூட்டத்தில் பங்கேற்ற மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசியதாவது:

கோவையில் மக்கள் ஆசி யாத்திரையானது கடந்த திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. இந்த யாத்திரையின் 2 ஆவது நாளான இன்று தாராபுரத்தில் மிகச்சிறப்பான  வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் அமைச்சரை அறிமுகம் செய்து வைக்கவேண்டியது மரபாகும். இந்த அறிமுகத்தைத் தடுத்தது திமுக}காங்கிரஸ் கூட்டணி. இதனால்தான் மக்களை நேரடியாகச் சந்தித்து ஆசி பெற்றுவருகிறோம். தாராபுரம் மக்கள் என்மீது எவ்வளவு பாசம் வைத்திருந்தீர்கள் என்பதை கடந்த சட்டப்பேரவை தேர்தல் நேரத்தில் கண்கூடாகப் பார்த்துள்ளேன். முதல்முறையாக நம்முடைய பிரதமர் மோடி சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்துக்காக தாராபுரம் வந்து சென்றுள்ளார். இதன் மூலமாக தாராபுரத்துக்கு பிரதமர் மோடி பெருமை சேர்த்துள்ளார்.

தாராபுரம் சட்டப்பேரவைத் தேர்தலில் சொற்ப வாக்குவித்தியாசத்தில்தான் நாம் வெற்றி வாய்ப்பை இழந்தோம் என்பது அனைவருக்கும் தெரியும். எனினும் தமிழருக்கு அமைச்சரவையில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காக தாராபுரத்தில் வேட்பாளராக இருந்த எனக்கு அமைச்சரவையில் இடம் அளித்துள்ளார். எனது பாட்டனார் செருப்பு தைத்துக் கொண்டிருந்தார். எனதுதாய், தந்தை தற்போதும் விவசாயம் செய்து வருகின்றனர். சாதாரண குடும்பத்தில் இருந்து வந்து என்னை தமிழகத்துக்கு சேவை செய்வதற்காக அமைச்சராக்கிய பிரதமர் மோடிக்கு தாராபுரம் மக்களின் சார்பாக மனமார்ந்த நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தாராபுரம் மக்களின் நீண்டநாள் கோரிக்கையான ரயில் திட்டம் தொடர்பாக பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தின்போதே பேசியுள்ளார். தாராபுரம் வளர்ச்சி, முன்னேற்றம் நமது தாரக மந்திரமாக இருக்கும். மூலனூர், குண்டடம் பகுதி முன்னேற்றம் அடைய வேண்டும். ஈரோட்டில் இருந்து தாராபுரம் வழியாக பழனிக்கு ரயில்பாதை அமைக்கும் திட்டம் செயல்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றார். இதைத்தொடர்ந்து, கண்ணாங் கோயில் பகுதியில் 100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றி வந்த 38 தொழிலாளர்களை நேரில் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார்.

திருப்பூரில்: முன்னதாக திருப்பூர் வித்யாலயம் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள சுதந்திரப் போராட்ட தியாகி சுந்தராம்பாள் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதன் பிறகு அவரது குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.

இந்தக்கூட்டத்தில்.பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், கேரள மாநில பாஜக பொறுப்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com