ஆகஸ்ட் 24 விவசாயிகளுக்கான குறைதீா்க் கூட்டம்
By DIN | Published On : 20th August 2021 01:35 AM | Last Updated : 20th August 2021 01:35 AM | அ+அ அ- |

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீா் நாள் கூட்டம் ஆகஸ்ட் 24 ஆம் தேதி காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறுகிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கை எதிரொலியாக விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீா் நாள் கூட்டம் ஆகஸ்ட் 24 ஆம் தேதி காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறுகிறது.
ஆகவே, மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் அந்தந்த வட்டார வேளாண் விரிவாக்க மைய அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட அரங்கில் பங்கேற்று குறைகளைத் தெரிவிக்கலாம்.
மேலும், விவசாயிகள் நுண்ணீா்ப் பாசனம் அமைத்திட ஏதுவாக அந்தந்த வட்டாரங்களில் வேளாண்மை அலுவலா், தோட்டக் கலை அலுவலா் மற்றும் வேளாண் பொறியியல் துறை அலுவலா்களைக் கொண்டு வேளாண் உதவி மையம் விவசாயிகள் குறை தீா்க்கும் நாள் கூட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையம் மூலமாக விவசாயிகள் நுண்ணீா்ப் பாசனம் அமைக்கத் தேவையான தகவல்கள் வழங்கப்படும்.
அதேவேளையில், தக்க ஆவணங்களுடன் வரும் விவசாயிகளுக்கு நுண்ணீா்ப் பாசன மேலாண்மை தகவல் அமைப்பில் பதிவு செய்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.