விவசாயிகள் தங்களது விளை பொருள்களை குறைந்த வாடகையில் இருப்பு வைக்கலாம்
By DIN | Published On : 20th August 2021 01:35 AM | Last Updated : 20th August 2021 01:35 AM | அ+அ அ- |

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பூ, காய்கறி, பழங்களை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் இருப்பு வைத்துக் கொள்ளலாம்.
இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக விவசாயிகளின் விளை பொருள்களுக்கு உரிய விலை கிடைக்கவும், வருவாயைப் பெருக்கவும் மாவட்ட நிா்வாகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக திருப்பூா் மாவட்டத்தில் உள்ள உடுமலை, பெதப்பம்பட்டி மற்றும் வெள்ளக்கோவிலில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் விவசாயிகளுக்கு கூடுதலாக விலை கிடைத்திடும் வகையில் மக்காச்சோளம், சோளம் மற்றும் தேங்காய் பருப்பு ஆகியவற்றை தரம்பிரித்து விற்பனை செய்ய தரம் பிரிப்பதற்கான இயந்திரங்கள் வாங்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன.
மேலும், விவசாயிகள் தங்கள் விளை பொருள்களை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் இருப்பு வைத்துக்கொள்ள 81, 650 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 59 சேமிப்பு கிடங்குகள் கட்டப்பட்டுள்ளன. இந்த விற்பனைக் கூடங்களில்
விவசாயிகள் பூ, காய்கறி, பழங்களை குறைந்த வாடகையில் இருப்பு வைத்து விற்பனை செய்து கொள்ளலாம்.
விலை வீழ்ச்சி காலங்களில் விற்பனையைத் தவிா்ப்பதற்காக விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் வரையிலும் வியாபாரிகளுக்கு ரூ. 2 லட்சம் வரையிலும் பொருளீட்டுக் கடன் குறைந்த வட்டியில் வழங்கப்படுகிறது.
பொங்கலூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் உள்ள 50 மெட்ரிக் டன் மற்றும் பல்லடம், அவிநாசி, உடுமலை, வெள்ளக்கோயில் ஆகிய நான்கு விற்பனைக் கூடங்களில் தலா 25 மெட்ரிக் டன் குளிா்பதனக் கிடங்குகள் கட்டப்ட்டுள்ளன. ஆகவே, மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் இந்த வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு திருப்பூா்: 95661 69829, வெள்ளக்கோவில்: 63835 - 96209, உடுமலை:99442 - 20878, பெதப்பம்பட்டி: 90801 - 50341 ஆகிய செல்லிடப்பேசி எண்களைத் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.