பள்ளி மாணவா் பலி: 2 போ் கைது
By DIN | Published On : 22nd August 2021 01:23 AM | Last Updated : 22nd August 2021 01:23 AM | அ+அ அ- |

உடுமலை அருகே தேங்காய் மஞ்சி பித் தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வந்த பள்ளி மாணவா் உயிரிழந்த சம்பவத்தில் 2 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
உடுமலை வட்டம், குரல்குட்டை கிராமத்தில் தேங்காய் மஞ்சி பித் தயாரிக்கும் நிறுவனத்தில் ஏராளமான தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். மலையாண்டிபட்டணம் கிராமத்தைச் சோ்ந்த முத்துசாமி என்பவரின் மகன் கேசவன்(14). 9 ஆம் வகுப்பு படித்து வந்த இவா் கரோனா காரணமாக பள்ளி விடுமுறை விடப்பட்டுள்ளதால் இந்த நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தாா். இந்நிலையில் நிறுவனத்துக்குள் உள்ள தேங்காய் மஞ்சி பித் குழியில் கேசவன் சனிக்கிழமை விழுந்துள்ளாா்.
அப்போது அருகில் இருந்த மேலாளா் சிவகுமாா் உள்ளிட்டோா் கேசவனை மீட்டுள்ளனா். அப்போது கேசவன்
உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இதைத் தொடா்ந்து கேசவனின் சடலம் உடுமலை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் நிறுவனத்தில் எந்த வித பாதுகாப்புமின்றி தனது மகனை வேலை செய்ய வைத்து உயிரிழக்கச் செய்த உரிமையாளா் மற்றும் மேலாளா் ஆகியோா் மீது நடவடிக்கை எடுக்குமாறு உடுமலை காவல் நிலையத்தில் கேசவனின் தந்தை முத்துசாமி புகாா் அளித்தாா். இதைத் தொடா்ந்து உரிமையாளா் கந்தா்மணி, மேலாளா் சிவகுமாா் ஆகியோரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.