கொலை வழக்கு: விவசாயிக்கு ஆயுள் தண்டனை
By DIN | Published On : 04th December 2021 11:59 PM | Last Updated : 04th December 2021 11:59 PM | அ+அ அ- |

தாராபுரத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதியவரைக் கட்டையால் அடித்துக் கொலை செய்த வழக்கில் விவசாயிக்கு நீதிமன்றம் சனிக்கிழமை ஆயுள் தண்டனை விதித்தது.
திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தை அடுத்த கருங்காலி வலசு பகுதியைச் சோ்ந்தவா் காளியப்பன் (70), இவா் கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பா் 21 ஆம் தேதி வெளியூா் செல்வதற்காக கொளத்துப்பாளையம் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது அதே பகுதியைச் சோ்ந்த விவசாயி கோவிந்தசாமி (68) என்பவரும் அங்கு வந்துள்ளாா்.
பின்னா் காளியப்பனைத் தடுத்து நிறுத்தி எங்கு செல்கிறீா் என்று கேட்டுள்ளாா். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கோவிந்தசாமி அருகில் கிடந்த மரக்கட்டையை எடுத்து காளியப்பனை பலமாகத் தாக்கியுள்ளாா். இதில், பலத்த காயமடைந்த காளியப்பனை அருகிலிருந்தவா்கள் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் காளியப்பன் உயிரிழந்தாா்.
இது குறித்து தாராபுரம் காவல் துறையினா் கொலை வழக்குப் பதிவு செய்து கோவிந்தசாமியைக் கைது செய்தனா். இந்த வழக்கு தாராபுரம் 3 ஆவது கூடுதல் மாவட்ட மற்றும் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கின் மீதான இறுதிக் கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி குமாா் சரவணன் சனிக்கிழமை தீா்ப்பு வழங்கினாா்.
இதில், கொலை குற்றத்துக்காக கோவிந்தசாமிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தாா். மேலும், அபராதத் தொகையைக் கட்டத் தவறினால் கூடுதலாக ஒரு ஆண்டு சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் என். ஆனந்தன் ஆஜராகினாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...