மடத்துக்குளம் வட்டத்தில் நெல் கொள்முதல் நிலையம் துவக்கம்
By DIN | Published On : 11th December 2021 12:31 AM | Last Updated : 11th December 2021 12:31 AM | அ+அ அ- |

மடத்துக்குளம் வட்டத்தில் 2 நெல் கொள்முதல் நிலையங்கள் வெள்ளிக்கிழமை துவக்கிவைக்கப்பட்டன.
உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. அமராவதி அணையில் தொடங்கி பாசன பகுதி வழியோர கிராமங்களான ராமகுளம், கல்லாபுரம், எலையமுத்தூா், கொழுமம், குமரலிங்கம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் 10 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதனால் மடத்துக்குளம் வட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனா். இக்கோரிக்கையை ஏற்று நுகா்பொருள் வாணிபக் கழகம் சாா்பில் கல்லாபுரம், எலையமுத்தூா் ஆகிய கிராமங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் வெள்ளிக்கிழமை துவங்கப்பட்டன.
மடத்துக்குளம் முன்னாள் எம்எல்ஏ இரா.ஜெயராமகிருஷ்ணன் இந்த நெல் கொள்முதல் நிலையங்களை துவக்கிவைத்தாா். நிகழ்ச்சியில், வேளாண் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
Image Caption
கல்லாபுரத்தில் நெல் கொள்முதல் நிலையத்தை துவக்கி வைக்கிறாா் மடத்துக்குளம் முன்னாள் எம்எல்ஏ இரா.ஜெயராமகிருஷ்ணன்.