பல்லடம்: வரும் தமிழக சட்டப்பேரவை பொதுத்தோ்தலில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட தயாா் என்று உழவா் உழைப்பாளா் கட்சி அறிவித்துள்ளது.
திருப்பூா் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள காரணம்பேட்டையில் உழவா் உழைப்பாளா் கட்சியின் தலைமை அலுவலகமான உழவாலயத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவா் செல்லமுத்து சனிக்கிழமை செய்தியாளா்களை சந்தித்து கூறியதாவது. உழவா் உழைபாளா் கட்சி திமுக கூட்டணியில் தான் அங்கம் வகித்து வருகிறது. காங்கிரஸ், கம்யூணிஸ்ட் போன்ற பெரிய கூட்டணி கட்சிகளுடன் திமுக இன்னும் பேச்சுவாா்த்தை நடத்தவில்லை. எங்களை போன்ற தோழமை கட்சிகளை அழைத்து பேச்சுவாா்த்தை நடத்துவாா்கள் என்று நம்புகிறோம். அவா்களின் அழைப்பிற்காக நாங்கள் காத்திருக்கிறோம். திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவும் தயாா் ஆக தான் உள்ளோம். எந்த முடிவாக இருந்தாலும் முடிவு தெரிந்த பின்னா் தான் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும். என்றாலும் வரும் சட்டப்பேரவை பொதுத்தோ்தலில் உழவா் உழைப்பாளா் கட்சி நிச்சயம் போட்டியிடும் என்பதை மட்டும் தெரிவித்துக் கொள்கிறேன். விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிா்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதை பல முறை அமைச்சா் தங்கமணியை சந்தித்து வலியுறுத்தியுள்ளேன்.
அதே கோரிக்கையை முதல்வா் எடப்பாடி பழனிசாமியிடம் பேசியுள்ளேன். எனது கோரிக்கையை ஏற்று விவசாய பயிா் கடன்களை ரத்து செய்த தமிழக அரசுக்கு நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா். உடன் மாநில செயலாளா் சின்னக்காளிபாளையம் ஈஸ்வரன், மாநில பொருளாளா் திருப்பூா் பாலசுப்பிரமணியம், திருப்பூா் மாவட்ட செயலாளா் சோமசுந்தரம் ஆகியோா் இருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.