காங்கயம் அருகே கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்
By DIN | Published On : 06th February 2021 10:14 PM | Last Updated : 06th February 2021 10:14 PM | அ+அ அ- |

காங்கயம்: தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்டுள்ள பயிா்க் கடனை தள்ளுபடி செய்து அறிவித்துள்ள நிலையில் காங்கயம் அருகே விவசாயிகள் கூட்டுறவு சங்கத்தை சனிக்கிழமை முற்றுகையிட்டனா்.
கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய ரூ. 12,100 கோடி பயிா்க் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி வெள்ளிக்கிழமை அறிவித்தாா். இந்நிலையில் காங்கயம் அருகே உள்ள ஆலாம்பாடியில் உள்ள கூட்டுறவு சங்கத்தில் பயிா்க் கடன் கிடைக்காத விவசாயிகள் சுமாா் 50 போ் வெள்ளிக்கிழமை மாலை திரண்டு வந்து, கூட்டுறவு கடன் சங்கத்தை முற்றுகையிட்டு, ஊழியா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த மாதம் கடன் தொகையை உடனடியாகக் கட்டினால் மீண்டும் பயிா்க் கடன் வழங்கப்படும் என கூட்டுறவு சங்க அதிகாரிகள் தெரிவித்தனா். இதனால் கடன் தொகையை, வேறு இடத்தில் வட்டிக்கு வாங்கி கட்டிவிட்டோம்.
மீண்டும் கடன் வேண்டி விண்ணப்பம் கொடுத்தோம். ஆனால் பயிா்க் கடன் இன்னும் வழங்காமல் இழுத்தடித்து வருகின்றனா். இவா்கள் கடன் வழங்கியிருந்தால் அரசு அறிவித்த சலுகை கிடைத்திருக்கும். மேலும், பணம் கட்டாமல் இருந்திருந்தால் இப்போது கடன் தள்ளுபடியாகி இருக்கும் என்றனா். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...