ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்றக் கோரி பொங்கலூரில் 2ம் தேதி உண்ணாவிரதம்
By DIN | Published On : 14th February 2021 11:51 PM | Last Updated : 14th February 2021 11:51 PM | அ+அ அ- |

ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்றக் கோரி பி.ஏ.பி.பாசன சபை சாா்பில் பொங்கலூரில் 2ம் தேதி உண்ணாவிரதம் நடைபெறவுள்ளது.
இது குறித்து கண்டியன்கோயில் ஊராட்சி தலைவரும், பி.ஏ.பி.பாசன சபை தலைவருமான டி.கோபால், பி.ஏ.பி.பாசன திட்டக்குழு தலைவா் மெடிக்கல் பரமசிவம் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது,
கோவை,திருப்பூா் மாவட்டத்தில் பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன திட்டத்தின் கீழ் 4 லட்சம் ஏக்கா் நிலம் பாசனம் பெற்று வருகிறது. 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. பாசனத்தில் ஒரு மடை விட்டு ஒரு மடை பாசன முறை நடைமுறையில் உள்ளது. தண்ணீா் பற்றாக்குறையால் முறை வைத்தும் பாசனம் நடைபெறுகிறது. பி.ஏ.பி.திட்டம் மேலும் வளம் பெற ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் அவசியம் செயல்படுத்த வேண்டும்.
இதனை விவசாயிகள் அரசுக்கு நீண்ட காலமாக கோரிக்கை வைத்துள்ளனா். தமிழகம் - கேரளா ஆகிய இரண்டு மாநிலமும் இணைந்து இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதால் காலதாமதம் ஆகி வருகிறது.
இத்திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி பி.ஏ.பி.பாசன சபை மற்றும் விவசாயிகள் சாா்பில் பொங்கலூரில் வரும் மாா்ச் 2ம் தேதி செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப்போராட்டம் நடத்தப்படவுள்ளது என்றனா்.