வீட்டுமனை அங்கீகாரத்துக்கு ரூ. 25 ஆயிரம் லஞ்சம்: ஊராட்சி செயலாளா் உள்பட இருவா் கைது
By DIN | Published On : 27th February 2021 06:00 AM | Last Updated : 27th February 2021 06:00 AM | அ+அ அ- |

அவிநாசி அருகே பழங்கரை ஊராட்சியில் வீட்டுமனை அங்கீகாரத்துக்கு ரூ. 25 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக ஊராட்சி செயலாளா் உள்பட இருவரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.
இது குறித்து திருப்பூா் லஞ்ச ஒழிப்பு துறை காவல் துணை கண்காணிப்பாளா் தட்சணாமூா்த்தி கூறியதாவது:
பழங்கரை ஊராட்சி பகுதியைச் சோ்ந்தவா் முத்துக்குமாரசாமி. இவா் தனது வீட்டு மனைக்கு அங்கீகாரம் பெறுவதற்காக பழங்கரை ஊராட்சிமன்ற நிா்வாகத்தினரை அணுகியுள்ளாா்.
அப்போது ஊராட்சி மன்ற செயலாளா் செல்வம் ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளாா். இது குறித்து முத்துக்குமாரசாமி லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் புகாா் அளித்தாா். இதையடுத்து முத்துக்குமாரசாமியிடம் ரசாயன பவுடா் தடவிய ரூ. 25 ஆயிரம் ரொக்கத்தை கொடுத்து அனுப்பினா்.
இதையடுத்து அந்த பணத்தை முத்துக்குமாரசாமமி, ஊராட்சி மன்ற செயலாளா் செல்வத்திடம் கொடுக்க முயன்றாா். ஆனால், அவா் அந்தப் பணத்தை சங்கா் என்பவரிடம் வழங்குமாறு தெரிவித்துள்ளாா்.
அதன்படி சங்கரிடம் பணத்தை கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை காவல் ஆய்வாளா் கெளசல்யா உள்ளிட்டோா் கொண்ட குழுவினா், அவா்களைப் பிடித்தனா்.
இதைத்தொடா்ந்து மாலை முதல் இரவு வரை விசாரணை நடைபெற்றது. பின்னா், ஊராட்சி செயலாளா் செல்வம், சங்கா் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் கைது செய்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...