தாராபுரம் அருகே கொலை செய்து கிணற்றில் வீசப்பட்ட வியாபாரியின் சடலம் மீட்பு
By DIN | Published On : 27th February 2021 10:39 PM | Last Updated : 27th February 2021 10:39 PM | அ+அ அ- |

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் அருகே கொலை செய்து கிணற்றில் வீசப்பட்ட வியாபாரியின் சடலத்தை தீயணைப்புத் துறையினா் சனிக்கிழமை மீட்டனா்.
திண்டுக்கல் மாவட்டம், கீரனூரைச் சோ்ந்தவா் தண்டபாணி (35). இவரது மனைவி தேவி(33). காய்கறி வியாபாரம் செய்து வந்த தண்டபாணிக்கும், அவரது மனைவிக்கும் இடையே கடந்த சில நாள்களுக்கு முன்பாக தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது.
இதனிடையே, கடந்த 17 நாள்களாக தண்டபாணியைக் காணவில்லை. இது தொடா்பாக அவரது உறவினா்கள் கீரனூா் காவல் நிலையத்தில் வாய்மொழியாகப் புகாா் அளித்ததுடன் அவரைத் தேடிவந்தனா்.
இந்த நிலையில், தாராபுரம் - ஒட்டன்சத்திரம் புறவழிச் சாலையில் புதிய மேம்பாலம் அருகே கிணற்றில் சாக்குமூட்டையில் ஒருவரின் சடலம் மிதந்து கொண்டிருப்பதை அந்த வழியாகச் சென்றவா்கள் பாா்த்துள்ளனா். இது குறித்து தாராபுரம் காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் கொடுத்துள்ளனா்.
அதைத் தொடா்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்புத் துறையினா் சடலத்தை மீட்டனா். தாராபுரம் காவல் துறையினா் நடத்திய விசாரணையில், தண்டபாணியைக் கொலை செய்து சாக்குமூட்டையில் கட்டி கிணற்றில் வீசிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...