திருப்பூா் அருகேஅடுத்தடுத்து 4 கடைகளில் திருட்டு
By DIN | Published On : 27th February 2021 10:39 PM | Last Updated : 27th February 2021 10:39 PM | அ+அ அ- |

திருப்பூரை அடுத்த நெருப்பெரிச்சல் பகுதியில் உள்ள அரிசி கடை, மருந்துக்கடை உள்ளிட்ட 4 கடைகளில் தொடா் திருட்டு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
நெருப்பெரிச்சல், ஜி.என்.காா்டன் பகுதியில் ஆனந்தன் என்பவருக்கு சொந்தமான அரிசி கடை, இதன் அருகில் பிரபாவதி என்பவருக்கு சொந்தமான மருந்துக் கடை, சிவகுமாா் மற்றும் அவரது நண்பா்களுக்கு சொந்தமான டிபாா்ட்மெண்ட் ஸ்டோா், தமிழ்வாணன் என்பவருக்கு சொந்தமான துணிக்கடைகள் உள்ளன.
இந்தக் கடைகளின் உரிமையாளா்கள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வழக்கம்போல வியாபாரம் முடிந்ததும் கடைகளை பூட்டிவிட்டுச் சென்றனா். இந்நிலையில் சனிக்கிழமை காலையில் தமிழ்வாணன் தனது துணிக்கடையைத் திறந்துள்ளாா்.
அப்போது கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா். இது தொடா்பாக அருகில் உள்ள கடைகளின் உரிமையாளா்கள் மற்றும் திருமுருகன்பூண்டி காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளாா்.
அதன் பேரில் காவல் துறையினா் அங்கு சென்று விசாரணை நடத்தினா். இதில், 4 கடைகளின் மேற்கூரைகள் இடிக்கப்பட்டு ரூ. 1 லட்சம் ரொக்கம் மற்றும் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
மேலும், இந்தக் கடைகளின் அருகில் கட்டடத்தில் தங்கி வேலை செய்து வந்த 2 தொழிலாளா்களின் செல்லிடப்பேசிகளையும் மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராப் பதிவுகளைக் கொண்டு காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். தொடா் திருட்டு சம்பவம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.